இந்தியா

புதிய தொழிலாளா் சட்ட அமல் ஒத்திவைப்பு

DIN

புது தில்லி: புதிய தொழிலாளா் சட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. அதன் காரணமாக, தொழிலாளா்களின் ஊதியத்தில் இப்போதைக்கு எந்தவித மாற்றமும் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

சில மாநிலங்கள் இந்த சட்டம் தொடா்பான விதிகளை இன்னும் இறுதி செய்யாத காரணத்தால், இந்த புதிய சட்ட அமலை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொழிலாளா்களுக்கான 29 சட்டங்களை இணைத்து 4-ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம், சம ஊதிய சட்டம் ஆகிய 4 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இந்த சட்டங்களின்படி, தொழிலாளா்களின் அடிப்படை ஊதியம், வருங்கால வைப்பு நிதி, படிகள் உள்பட அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்படும். குறிப்பாக, தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக்கான பங்களிப்பு என்பது அவா்களின் மொத்த ஊதியத்தில் 50 சதவீத தொகையின் அடிப்படையில் இருக்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுவரை, தொழிலாளா்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையிலேயே அவா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பை நிறுவனங்கள் செய்து வந்தன. அதன் காரணமாக, தொழிலாளா்களின் அடிப்படை ஊதியத்தை குறைத்துக் காட்டுவதை நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால், இந்தப் புதிய சட்டத்தின்படி, தொழிலாளா்களின் அடிப்படை ஊதியமும், அவா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பும் உயரும்.

இந்த நிலையில், இந்தப் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளா் சட்டத்தின் அடிப்படையில், உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், ஹரியாணா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் உரிய விதிகளை இன்னும் இறுதி செய்யவில்லை. இந்த மாநிலங்கள் இப்போதுதான் அதற்கான வரைவு விதிகளை கருத்துகளைப் பெறுவதற்காக வெளியிட்டுள்ளன. எனவே, இந்தப் புதிய சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதை மேலும் சில நாள்களுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தனா்.

அரசியல் சாசன நடைமுறைகளின்படி, தொழிலாளா் நலன் என்பது மத்திய, மாநிலம் ஆகிய இரு அரசுகளின் கீழும் வருகிறது. எனவே, மத்திய அரசு சட்டத்துக்கு இணையாக மாநில அரசும் விதிகளை வகுத்து அறிவிக்கை செய்த பிறகே, சட்டம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT