தெலங்கானாவில் பொது முடக்கம்? நாளை கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்
தெலங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
தெலங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
இதுபற்றி அந்த மாநில முதல்வர் அலுவலகம் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"தெலங்கானா அமைச்சரவைக் கூட்டம் ஹைதராபாத்தில் நாளை கூடுகிறது. கூட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும்.
பொது முடக்கம் பற்றி இரண்டு விதமான கருத்துகளும் வருகின்றன. சில மாநிலங்களில் பொது முடக்கத்துக்குப் பிறகும் கரோனா பாதிப்பு குறையவில்லை என்பது போன்ற தகவல்கள் வருகின்றன. சிலர் பொது முடக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை முன் வைக்கின்றனர்.
எனவே, பொது முடக்கத்தின் சாதக, பாதகங்கள் குறித்தும், அதன் தாக்கங்கள் குறித்தும் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தேவையான முடிவுகள் எடுக்கப்படும்."
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தெலங்கானாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,97,361. மொத்த பலி எண்ணிக்கை 2,739. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 65,757.