இந்தியா

கரோனாவுக்கு மருந்து: நாட்டு மருத்துவரை தேடி வரும் மக்கள் கூட்டம்

DIN

திருப்பதி: கரோனா நோய் தொற்றால் அவதியுற்று வரும் மக்களுக்கு ஆந்திராவைச் சேர்ந்த ஆயர்வேத மருத்துவர் ஆனந்தய்யா இலவசமாக மருந்து வழங்கி வருகிறார். அதை பெற மக்கள் கூட்டம் ஆயுர்வேத மருத்துவ சாலையை சுற்றி அலைமோதி வருகிறது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் மைதுகூரு மண்டலம் கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்தவர் ஆனந்தய்யா. அவர் நாட்டு வைத்தியர் மட்டுமல்லாமல், அந்த கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச்சாகவும் இருந்து வருகிறார். அவர் கரோனா தொற்று காரணமாக பலர் மூச்சுதிணறல், மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவதை கண்டு தன் சுய முயற்சியால் ஒரு ஆயுர்வேத மருந்து ஒன்றை கண்டறிந்தார். அந்த மருந்தை சிலருக்கு அளித்து பரிசோதனை செய்ததில் பலருக்கு நிவாரணம் கிடைத்ததுடன் தொற்றிலிருந்தும் விடுபட்டனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த பலரை இவர் தன் மருந்து மூலம் உயிருடன் நடமாட வைத்திருக்கிறார். தன்னுடைய சுயலாபத்தை கருதாமல், பரந்த மனப்பான்மையுடன் தான் தயாரித்த இந்த மருந்தை நோயாளிகளுக்கு இலவசமாக அளித்து வந்தார். இதை அறிந்த கரோனா நோயாளிகள் கிருஷ்ணபட்டணத்தை முற்றுகையிட தொடங்கினார்.

இதனால் அப்பகுதியில் 5 முதல் 6 கி.மீ வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி ஆட்சியர் விரைந்து வந்து இந்த மருந்து அளிப்பதை நிறுத்தியதுடன், மருந்தை பரிசோதிக்கவும் அரசின் அனுமதியுடன் ஆயுஷ் துறைக்கு உத்திரவிட்டார். மேலும் பலர் நாட்டு வைத்தியர் ஆனந்தய்யா தயார் செய்த மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் லோஆயுக்தாவில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அங்கு விரைந்த ஆந்திர மாநில சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ்த்துறை அதிகாரிகள் மருந்தை கைப்பற்றி விஜயவாடாவில் உள்ள பரிசோதனை கூடத்தில் மருந்தின் தரத்தை பரிசோதனை செய்து வருகின்றனர். அதில் மருந்தினால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை இந்த மருந்தை உட்கொண்டவர்கள் ஆரோக்கியமாக நலமுடன் உள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர மாநில அறிந்த முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார். அவரின் உத்திரவின்படி ஐசிஎம்ஆர் குழு வெள்ளிக்கிழமை மாலை கிருஷ்ணபட்டணம் சென்று மருந்தின் தரத்தை பரிசோதிக்க உள்ளது. அதில் உள்ள பக்கவிளைவுகள், நிவாரண தன்மை உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இந்நிலையில் மக்கள் பலரின் வற்புறுத்தலினாலும், நோயாளிகளுக்கும் உடல்நலிவு ஏற்படவில்லை என்பதால், மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை காலை முதல் மருந்து வழங்குவதற்கு அனுமதி அளித்தார். அதன்படி ஆனந்தய்யாவின் பணியாளர்கள் இந்த மருந்து தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாள் 5 ஆயிரம் பேருக்கும், 2ம் நாள் முதல் தினந்தோறும் பத்தாயிரம் பேருக்கும் மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அப்பகுதி எம்எல்ஏ கோவர்தன் ரெட்டி நேரடி கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை காலை மருந்து வழங்குவது தொடங்கியது. 

சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பஞ்சாயத்து ராஜ், ஆயுஷ், கிராம களப்பணியாளர்கள் என பலர் இப்பணியில் ஈடுபட்டனர். காவல்துறையுடன், கிராம மக்களும், பல அரசு அதிகாரிகளும் இணைந்து மக்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இதை அறிந்த மக்கள் கிருஷ்ணபட்டணத்திற்கு படையெடுக்க தொடங்கினர். காலை 5 மணிக்கு மக்கள் வரிசை 6 கி.மீ தொலைவை கடந்தது. ஆயிரகணக்கில் இரு சக்கர வாகனங்கள், கார்கள், 2 ஆயிரம் ஆம்புலன்ஸ்கள் என கிருஷ்ணபட்டணம் அதிர தொடங்கியது. இதனால் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மருந்து வழங்குவது தொடங்கப்பட்டவுடன் அதை பெற மக்கள் முண்டியடிக்க தொடங்கினர். ஆயிரம் பேருக்கு வரை மருந்து வழங்கப்பட்டதும், பெரும் கூட்டம் காரணமாக கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், மருந்து வழங்குவது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து எம்எல்ஏ கோவர்தன் ரெட்டி கூறியதாவது, 'இந்த மருந்தின் தன்மையை அறிந்த மக்கள் பலர் இதை பெற வருகின்றனர். இதனால் சமூக இடைவெளி பின்பற்றுவது தவிர்க்கப்படுகிறது. இதில் கரோனா நோயாளிகள் அதிகம் உள்ளனர். அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் காவல்துறையினரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஐசிஎம்ஆர் குழு மாலை வந்து மருந்தை பரிசோதிக்க உள்ளது. மேலும் ஆயுஷ் துறையின் முடிவும் மாலைக்குள் கிடைத்து விடும். இவற்றை ஆராய்ந்து மாநில அரசும் இந்த மருந்து வழங்குவதை ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ளது. எனவே, வெளி மாநிலத்திலிருந்து வரும் கரோனா நோயாளிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்த  அவர், நிலைமை சீரானால் அவர்களுக்கு மருந்துகள் இலவசமாக கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்’, என்று கூறினார். 

இதுகுறித்து நாட்டு வைத்தியர் ஆனந்தய்யா கூறியதாவது. 'தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவு செய்து வைத்தியம் பார்த்தாலும் மக்கள் கரோனா தொற்றால் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுக்க இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் முழு ஒத்துழைப்புடன் இந்த மருந்து வழங்கும் பணி செயல்படுத்தப்படும். இதற்கான பொருட் செலவிற்கு உதவ முன்வரும் நன்கொடையாளர்கள் தராளமாக இதில் பங்கு கொள்ளலாம்’, என்று அவர் கூறினார். மருந்து வாங்க காத்திருக்கும் மக்கள் கூறியதாவது, 'கரோனா தொற்று ஏற்பட்டு இறப்பவர்களை காட்டிலும், அதன் பெயரை கேட்டவுடன் மனத்தால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும், இதற்கான மருத்துவச் செலவுகளை மேற்கொள்ள வசதியில்லாதவர்களும் அதிகம். இதனால் பல குடும்பங்கள் தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மருந்து ஆபத்பாந்தவனாக கிடைத்துள்ளது. 

இதை உட்கொண்ட பலர் உடல் நலமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர். கரோனா மருந்துகள் ஆயிரகணக்கான ரூபாய்க்கு கள்ள சந்தையில் விற்கப்பட்டு வரும் நிலையில், இலவசமாக அளிப்பது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இது ஒரு வரமாக கிடைத்துள்ளது’, என்று கூறினர். கரோனா நோய் தொற்றிலிருந்து விடுபட வழங்கப்படும் இந்த ஆனந்தய்யா ஆயுர்வேத மருந்து பல பிரிவுகளை கொண்டுள்ளது. கரோனா தொற்று வருவதற்கு முன்னர் தடுப்பு மருந்தாகவும், கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களின் தொற்றின் வகைக்கு ஏற்ப பி, எப், எல் என்ற பிரிவுகளாக பிரித்தும் மருந்து அளித்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள நோயாளிகளுக்கு கண்களில் சொட்டு மருந்து விடுகின்றனர். இவ்வாறு பல பிரிவுகளாக இந்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு வரிசையில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பிரிவுகள் குறித்து தெரிவித்து அவர்களின் நிலையை அவர்களின் மருத்துவ அறிக்கை மூலம் அறிந்து அவர்களின் மருந்துகளை பரிந்துரைத்து வருகின்றனர். அதன்பின் நோயாளிகள் சென்று தங்கள் பிரிவிற்கான மருந்துகளை இலவசமாக பெற்று செல்லலாம். இதற்காக நூற்றுகணக்கான கிராம மக்கள் வாலண்டியர்களாக செயல்பட்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT