இந்தியா

ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்தவும் தயார்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

 நமது நிருபர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்தவும் தயாராக உள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
 இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் முன்பு நடைபெற்ற விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்தும், ஆணையத்தின் விசாரணை அதிகாரம் குறித்தும் வாதிடப்பட்டது.
 மேலும், "இயற்கை நீதியின் கொள்கை விதிகளை மீறுவதாகவும், பாரபட்சமாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை செயல்பாடுகள் உள்ளன. ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு இடம்பெறாததால் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்' எனவும் வாதிடப்பட்டது.
 இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.ஏ. சுந்தரம், தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, வழக்குரைஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
 தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே முன்வைத்த வாதம்:
 ஆறுமுகசாமி ஆணையத்தை முந்தைய அரசு அமைத்த போதிலும், தற்போதைய அரசு அந்த ஆணையத்தின் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ளவே விரும்புகிறது. மேலும், ஆணையம் தரப்பில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, ஆணையத்தின் விசாரணை அப்பல்லோவின் நன்மதிப்பை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரிவிக்கப்படவில்லை.
 ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அதன் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 ஆணையத்தின் செயல்பாட்டைப் பொருத்தமட்டில் அது ஒரு உண்மை கண்டறியும் குழுதானே தவிர, உத்தரவிடும் குழு அல்ல. அப்பல்லோ மருத்துவமனையின் பிரதான கோரிக்கையானது மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆணையத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்த உண்மையை மக்களுக்கு தெரிவிக்கவே அரசு விரும்புகிறது. அதற்காக ஆணையத்தை விரிவுபடுத்தும் வகையில், மறுபரிசீலனை செய்ய வேண்டுமானாலும் அதற்கும் அரசு தயாராக உள்ளது என்று அவர் வாதிட்டார்.
 உண்மை கண்டறியும் குழு: ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார், "ஆணையம் அதன் சட்ட விதிகளுக்கு ஏற்பவே செயல்பட்டுள்ளது. ஆணையத்தின் செயல்பாடுகள் மீது குறை சொல்ல முடியாது. பல்வேறு சம்பவங்களில் உண்மையைக் கண்டறிவதற்காக பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு திறம்பட அதன் பணியைச் செய்துள்ளன. குறிப்பாக நானாவதி கமிஷன் உள்ளிட்ட ஆணையங்களின் அறிக்கைகள் நீதி கிடைக்கச் செய்வதில் முக்கிய பங்களிப்பு அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஆணையம், ஒரு உண்மை கண்டறியும் குழுதான். அந்தக் குழுவின் அறிக்கையின் மீது அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்த ஆணையத்தின் செயல்பாட்டில் பாரபட்சமோ அல்லது இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு முரணாகவோ இல்லை' என்று வாதிட்டார். இதையடுத்து, அவர் வாதங்களைத் தொடர்ந்து முன்வைக்கும் வகையில், வழக்கு விசாரணை புதன்கிழமையும் (நவ. 24) தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT