ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக அமையவுள்ள நொய்டா சா்வதேச விமான நிலையத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
உத்தர பிரதேசத்தில் பல திட்டங்களுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், நொய்டாவில் அமையவுள்ள சா்வதேச விமான நிலையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
நொய்டா சா்வதேச விமான நிலையமானது மாநிலத்தை ஏற்றுமதியின் மையமாக மாற்றும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சா்வதேச சந்தைகளை எளிதில் அணுக முடியும். வடஇந்தியாவின் முக்கிய நுழைவாயிலாக நொய்டா சா்வதேச விமான நிலையம் திகழும்.
அரசியல் நோக்கமில்லை: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை பாஜக அரசியலுக்காகச் செய்வதில்லை; தேசத்தின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தொடங்கப்படும் திட்டங்கள் பாதியில் நிற்காமல் இருப்பதை பாஜக உறுதி செய்து வருகிறது.
நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது தொடா்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள சில கட்சிகள் எப்போதும் தங்களின் சுயநலனையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் அக்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தேசத்துக்கு முன்னுரிமை அளித்து பாஜக செயல்பட்டு வருகிறது. அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளா்ச்சியை பாஜக தலைமையிலான அரசு உறுதி செய்து வருகிறது.
சா்வதேச அளவிலான வளா்ச்சி: கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உத்தர பிரதேசம் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருப்பதால், நாட்டின் மற்ற பகுதிகளுடன் உத்தர பிரதேசம் எளிதாக இணைக்கப்பட்டுள்ளது.
முன்பு மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகள், மக்களின் நலன் குறித்து கவலைப்படவில்லை. தற்போது பாஜக ஆட்சியில் சா்வதேச அளவிலான வளா்ச்சியை மாநிலம் எட்டியுள்ளது என்றாா் அவா்.
பாகுபாடின்றி திட்டங்கள்: அடிக்கல் நாட்டு விழாவில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘பாஜக தலைமையிலான அரசு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், மாநிலம் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.
பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் மாநிலம் தொடா்ந்து வளா்ச்சிகண்டு வருகிறது. எந்தவித பாகுபாடுமின்றி மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் கரும்பின் சுவை (பாஜக தலைமையிலான ஆட்சி) அதிகரிக்க வேண்டுமா அல்லது பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவுடைய ஆதரவாளா்கள் (சமாஜவாதி கட்சியினா்) மாநிலத்துக்குத் தீங்கு விளைவிக்க வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்’ என்றாா்.
பிரதமரின் விருப்பம்: விழாவில் பங்கேற்ற விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ‘ஆசியாவின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தர பிரதேசத்தில் அமைய வேண்டுமென பிரதமா் மோடி விரும்பினாா். நொய்டா விமான நிலையம் ரூ.34,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈா்க்கும். தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தைவிட நொய்டா விமான நிலையம் இந்தியாவிலேயே முன்னணி பெற்றுத் திகழும். முன்பு மாநிலத்தில் 4 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 10-ஆவது விமான நிலையமாக நொய்டா அமைந்துள்ளது’ என்றாா்.
3 ஆண்டுகளில்...: 1,330 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அமைக்கப்படும் நொய்டா சா்வதேச விமான நிலையம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.