இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
 தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், துல்ரான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை திங்கள்கிழமை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் சுட்டனர். இந்த மோதலில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகளிடம் இருந்து ஆவணங்கள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
 கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர், காஷ்மீரில் தெருவில் பொருள்களை விற்று வந்த வெளிமாநில வியாபாரியான வீரேந்திர பாஸ்வான் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் என்று காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்தார்.
 மற்றொரு மோதல்: சோபியான் மாவட்டம், ஃபீரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் சுடத் தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 பயங்கரவாதி கைது: பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் காஷ்மீருக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய லஷ்கர் -ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை போலீஸார் கைது செய்தனர்.
 இது தொடர்பாக ஜம்மு பிராந்திய கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறியது:
 தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், வேரிநாக் பகுதியைச் சேர்ந்த இர்ஃபான் அகமது பட், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் அனுப்பப்பட்ட ஆயுதங்களைப் பெறுவதற்காக அண்மையில் ஜம்முவுக்கு வந்தார். எனினும் அந்த ஆயுதங்களை சர்வதேச எல்லைக்கு 6 கி.மீ. தூரத்தில் உள்ள சௌஞ்சநா கிராமத்தில் போலீஸார் கடந்த 2-ஆம் தேதி கண்டெடுத்தனர். ஒரு ஏகே ரக துப்பாக்கி, 3 தோட்டாக்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். இந்த ஆயுதப் பறிமுல் தொடர்பாக சத்வாரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 இந்த வழக்கு தொடர்பாக இர்ஃபான் அகமது பட் கைது செய்யப்பட்டார். எல்லைக்கு அப்பாலிருந்து இயக்குபவர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதையும், லஷ்கர் அமைப்புடன் இணைந்து செயல்படுவதையும் அவர் ஒப்புக் கொண்டார் என்று முகேஷ் சிங் தெரிவித்தார்.
 கடந்த ஓராண்டாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் அனுப்பி வைக்கப்படுவது அதிகரித்துள்ளது. இது எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
 எல்லைப் பகுதியில் கடந்த ஓராண்டில் இரண்டு ட்ரோன்களை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அவற்றில் வைத்து அனுப்பப்பட்ட வெடிகுண்டுகள், போதைப் பொருள்கள் போன்றவற்றை அவர்கள் கைப்பற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT