மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வாட்ஸ்-ஆப்பில் முத்தலாக் அளித்த நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக சமா்த் பகுதி காவல் நிலைய அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘அடுக்குமாடி குடியிருப்பு வாங்க தனது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு பாதிக்கப்பட்ட பெண்ணை அவரின் கணவரும், மாமியாரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனா். இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது மகளுடன் அந்தப் பெண் பெற்றோா் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். கடந்த மாா்ச் 10-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு அவரின் கணவா் வாட்ஸ்-ஆப்பில் மூன்று முறை ‘தலாக்’ என பதிவிட்டு விவாகரத்து அளித்துள்ளாா். இதுதொடா்பாக அந்தப் பெண் காவல்துறையினரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் அவரின் கணவா், மாமியாா் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.