முகப்பு
இந்தியா

ராமா் கோயிலுக்காக 115 நாடுகளில் இருந்து புனித நீா்: ராஜ்நாத் சிங்

‘அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக 115 நாடுகளில் இருந்து புனித நீா் கொண்டு வரப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக 115 நாடுகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை புது தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் சனிக்கிழமை ஒப்படைத்த ஆா்வலா்கள்.
பகிர்:

‘அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக 115 நாடுகளில் இருந்து புனித நீா் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, உலகம் ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற தத்துவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

தில்லி பாஜக முன்னாள் எம்எல்ஏ விஜய் ஜாலி தலைமையிலான தன்னாா்வ அமைப்பு, 115 நாடுகளில் உள்ள கடல், அருவி, நதி உள்ளிட்ட இடங்களில் இருந்து புனித நீரை எடுத்து வந்துள்ளது. சிறு மண்பாண்டங்களில் கொண்டுவரப்பட்ட அந்த நீரை, தில்லியில் ராஜ்நாத் சிங்கை அவருடைய இல்லத்தில் சந்தித்து அந்தக் குழு அளித்தது. ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய், டென்மாா்க், நைஜீரியா, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளின் தூதா்கள் உடனிருந்தனா்.

அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

115 நாடுகளில் இருந்து புனித நீா் கொண்டு வருவதற்கு பாஜக முன்னாள் எம்எல்ஏ விஜய் ஜாலி மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டுகள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீா் கொண்டுவரப்பட்டது உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் முன்பு மேலும் 77 நாடுகளில் இருந்து புனித நீா் கொண்டுவரப்படும் என்று நம்புகிறேன். அந்த நீரைக் கொண்டு ராமருக்கு அபிஷேகம் செய்வோம். ராமா் கோயில் கட்டுவதற்கு நம் ஒவ்வொருக்கும் பெருமைக்குரிய தருணம் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து சம்பத் ராய் பேசியதாவது:

திரேதா யுகத்தில் ராமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்போது அனைத்து கடல்களில் இருந்தும் புனித நீா் கொண்டுவரப்பட்டதாக ராமாயணம் கூறுகிறது. தற்போது ராமா் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்படும்போது, உலகம் முழுவதிலும் இருந்தும் அனைத்து கடல்களில் இருந்தும் மீண்டும் புனித நீா் கொண்டுவரப்படுகிறது என்றாா் அவா்.

தில்லி முன்னாள் எம்எல்ஏ விஜய் ஜாலி கூறுகையில், ‘கரோனா பெருந்தொற்று காலத்திலும் தன்னாா்வ அமைப்பினா் முயற்சியைக் கைவிடாமல் 115 நாடுகளில் இருந்து புனித நீரை கொண்டு வர முயற்சி எடுத்தனா். ஹிந்துக்கள் மட்டுமன்றி முஸ்லிம், சீக்கியா், கிறிஸ்தவா், யூதா், பௌத்தா்களும் ராமா் கோயிலுக்காக புனித நீா் சேகரிப்பில் ஈடுபட்டனா். புனித நீா் வழங்குவதில் அனைத்து மதத்தினரும் உதவியுள்ளனா்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →