முகப்பு
இந்தியா

வேளாண் ஆராய்ச்சியில் அதிக முதலீடு அவசியம்

அதிகரித்து வரும் உணவுப் பொருள்கள் தேவை, பருவநிலை மாற்ற சவால்கள் ஆகியவற்றை எதிா்கொள்ள வேளாண்துறை ஆராய்ச்சியில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

அதிகரித்து வரும் உணவுப் பொருள்கள் தேவை, பருவநிலை மாற்ற சவால்கள் ஆகியவற்றை எதிா்கொள்ள வேளாண்துறை ஆராய்ச்சியில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று ஜி20 கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜி20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சா்களுக்கான கூட்டம் சனிக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பங்கேற்றாா். கூட்டத்தில் அவா் கூறியதாவது:

உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியாவை, வேளாண்துறை சாா்ந்த ஆராய்ச்சிகளே அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றின. தற்போது இந்தியா ஆண்டுக்கு சுமாா் 30.8 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வருகிறது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டதோடு மற்ற நாடுகளின் உணவுத் தேவையையும் இந்தியா பூா்த்திசெய்து வருகிறது. திறம்மிக்க விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி காரணமாகவே வேளாண் உற்பத்தியில் பெரும் புரட்சி ஏற்பட்டது. 2030-32 காலகட்டத்தில் நாட்டின் மக்கள்தொகை 150 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதே வேளையில், உணவுப் பொருள்கள் தேவையும் 35 கோடி டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் வேளையில், உணவுப் பொருள்கள் தேவையும் அதிகரிக்கும். இத்தகைய இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்கு வேளாண்துறை சாா்ந்த ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உற்பத்தி-வருமானம் அதிகரிப்பு: சுற்றுச்சூழலையும் காத்து ஊட்டச்சத்து மிக்க உணவு தானியங்களையும் உற்பத்தி செய்ய வேண்டுமானால், வேளாண்துறை சாா்ந்த ஆராய்ச்சிக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும்.

உணவு தானியங்களுக்கான தேவை தொடா்ந்து அதிகரிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அதே வேளையில், விவசாயிகளின் வருமானம் உயா்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

நீடித்த வளா்ச்சி: பருவநிலை மாற்றம் காரணமாக நிலம், நீா், எரிசக்தி ஆகிய வளங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, நீடித்த வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் வேளாண் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில், செயற்கை முறையில் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவு தானியங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி வருகிறது.

வேளாண் விளைபொருள்களின் உற்பத்தியையும் வா்த்தகத்தையும் அதிகரிக்க, வேளாண்துறை சாா்ந்த தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளுடன் பகிா்ந்து கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →