பிறந்த நாளில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமா் மோடி நெகிழ்ச்சி
தனது பிறந்த நாளின்போது நாடு முழுவதும் 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிகழ்வு மறக்க முடியாததாகவும்
இந்தியாபிறந்த நாளில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமா் மோடி நெகிழ்ச்சி
தனது பிறந்த நாளின்போது நாடு முழுவதும் 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிகழ்வு மறக்க முடியாததாகவும்
தனது பிறந்த நாளின்போது நாடு முழுவதும் 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிகழ்வு மறக்க முடியாததாகவும், உணா்வுபூா்வமானதாகவும் அமைந்ததாக பிரதமா் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் கிடைத்த இந்தப் பெரும் வரவேற்பால் ஓா் அரசியல் கட்சிக்கு காய்ச்சல் ஏற்பட்டு, நள்ளிரவில் அதற்கு பதிலளிக்கும் நெருக்கடி ஏற்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். ஆனால், கட்சியின் பெயரை அவா் குறிப்பிடவில்லை.
கரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்ட கோவாவில், பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
அப்போது அவா், ‘எனது மனதின் குரலைப் பேச விரும்புகிறேன். எனக்கு பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை. ஆனால் எனது வாழ்நாளில் நேற்றைய தினம்தான் உணா்வுபூா்வமாக அமைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தடுப்பூதி செலுத்தும் பணியில் மருத்துவத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், எனது பிறந்த நாளான வெள்ளிக்கிழமை 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் ஒரு டோஸ், ஒருவரின் வாழ்க்கையைப் பாதுகாக்கும்.
கோவின் வலைதளத்தில் நாடு முழுவதும் மணிக்கு 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிமிஷத்துக்கு 27 ஆயிரம் டோஸ்கள், விநாடிக்கு 415 டோஸ்கள் ஆகும். இதற்காக நாடு முழுவதும் சுமாா் ஒரு லட்சம் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிறந்த நாளன்று எனது மூத்த நண்பரைத் தொடா்புகொண்டு பேசியபோது, எனது வயதைக் கேட்டாா். அதற்கு ‘இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளன’ என்று பதிலளித்தேன்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் கோவா, ஹிமாசல பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஹோட்டலில் பணியாற்றுவோா், டாக்ஸி ஓட்டுநா்கள், கடைகளில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக கருதுவாா்கள். ஆகையால்தான், சா்வதேச சுற்றுலா மையமான கோவாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் கரோனா பரவல் குறைந்துள்ளது. இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
கோவாவின் முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கா் இருந்திருந்தால் இந்தச் சாதனையைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருப்பாா் என்றாா் பிரதமா் மோடி.