வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் அவையில் உரையாற்றிய சித்தராமையா: காரணத்தையும் கூறினார்
கர்நாடக சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவின் வேட்டி அவிழ்ந்து விழ, அதை அறியாமல் அவர் காரசார விவாதத்தில் ஈடுபட்ட விடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவின் வேட்டி அவிழ்ந்து விழ, அதை அறியாமல் அவர் காரசார விவாதத்தில் ஈடுபட்ட விடியோ வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், உடனடியாக சித்தராமையாவிடம் சென்று, அவரது காதில் ரகசியமாக, வேட்டி அவிழ்ந்த விவகாரத்தைக் கூறிவிட்டு வந்தார். உடனே சுதாரித்துக் கொண்ட சித்தராமையா தனது வேட்டியை எடுத்து மீண்டும் கட்டிக் கொண்டார்.
சிவக்குமார் நடந்த விஷயத்தை தனது காதில் கூறியதும், "ஓ அப்படியா?" என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பிய சித்தராமையா, அவையிலிருந்தவர்களிடம், தான் அவிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்குவதாகக் கூறிவிட்டு, இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
பிறகு, வேட்டியை சரியாக, இறுக்கமாகக் கட்டிக் கொண்டு மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த சித்தராமையா, கரோனாவிலிருந்து மீண்ட பிறகு சுமார் 4-5 கிலோ எடை கூடிவிட்டதாகவும், அதனால்தான் வயிறும் பெரியதாகிவிட்டதால், வேட்டி நிற்காமல் நழுவி விழுவதாவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மிகவும் நகைச்சுவையாகப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமார், எங்களது தலைவர் டிகே. சிவக்குமார், அவரது மற்றும் அவரது கட்சியின் பிம்பத்தைக் காப்பாற்றும் வகையில் நடந்த விஷயத்தை சித்தராமையாவின் காதில் ரகசியமாகக் கூறினார். ஆனால், சித்தராமையாவோ அதனை ஒட்டுமொத்த அவைக்கும் தெரிவித்துவிட்டார். தற்போது பாஜகவினர் எங்கள் பிம்பத்துக்கு குழிதோண்டக் காத்திருக்கிறார்கள் என்றார்.