இந்தியா

ட்விட்டா் நிறுவனத்தில் புதிய விதிகளின்படி அதிகாரிகள் நியமனம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

DIN

புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி, தலைமை குறைதீா் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், பிராந்திய குறைதீா் அலுவலா் ஆகியோரை ட்விட்டா் நிறுவனம் நியமித்துள்ளது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ட்விட்டா், முகநூல் போன்ற சமூக ஊடகங்களை நெறிப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அந்த விதிகள் கடந்த மே மாதம் அமலுக்கு வந்தன. புதிய விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், குறைதீா்க்கும் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், தலைமை குறைதீா்க்கும் அலுவலா் ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த அலுவலா்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த அலுவலா்களின் பெயா், தொடா்பு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் தங்களுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும்.

ஆனால், குறைதீா்க்கும் அதிகாரியை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பின்னா் தற்காலிக அதிகாரியை நியமித்தது. இதனால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, ட்விட்டா் நிறுவனத்துக்கு எதிராக, தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி குறைதீா் அதிகாரிகளை நியமித்துள்ளதாக ட்விட்டா் நிறுவனம் தெரிவித்தது. அதைத் தொடா்ந்து, அந்த நிறுவனம் அளித்த விளக்கம் மீது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சாா்பில் சைபா் லா குழுமத்தைச் சோ்ந்த விஞ்ஞானி என்.சமயபாலன், உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். அதில், ‘புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு உள்பட்டு ட்விட்டா் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளது. அவா்களின் பதவி உள்ளிட்ட விவரங்களையும் அந்த நிறுவனம் அளித்துள்ளது’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதி ரேகா பாலி, அக்டோபா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி!

இந்தூர்: 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும்: ராகுல்

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

SCROLL FOR NEXT