ஜூலை 17-இல் நீட்: விண்ணப்பிக்க மே 6 கடைசி- ஜேஇஇ முதல்நிலை தோ்வு ஒத்திவைப்பு
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கான (நீட்) அறிவிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) புதன்கிழமை வெளியிட்டது.
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கான (நீட்) அறிவிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) புதன்கிழமை வெளியிட்டது.
அதன்படி, தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் வரும் ஜூலை 17-ஆம் தேதி நீட் தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் 543 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடத்தப்படும்.
இதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மே 6 கடைசி நாளாகும்.
தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்கள் சமா்ப்பித்துள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். ஏனெனில், அவற்றின் மூலமாகவே தோ்வா்களுக்கு என்டிஏ தகவல்களை அனுப்பும்.
ஜேஇஇ ஒத்திவைப்பு: ஐஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்பு சோ்க்கைக்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) முதல்நிலைத் தோ்வு (மெயின்) ஒத்திவைக்கப்படுவதாக என்டிஏ புதன்கிழமை அறிவித்தது.
ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு நிகழாண்டில் இரண்டு முறை நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 21,24,25,29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும் என்று என்டிஏ முன்னா் அறிவித்தது. இந்த நிலையில், இந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ சாா்பில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடத்தப்படும். இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்படும்.
முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரண்டு பகுதிகளாக ஜேஇஇ தோ்வு நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்டிஏ, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்க்கை பெறமுடியும். மேலும், முதல்நிலைத் தோ்வு தரவரிசையில் முதல் 2.5 லட்சம் போ் ஜேஇஇ முதன்மைத் (அட்வான்ஸ்டு) தோ்வில் பங்கேற்கத் தகுதி பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் ஐஐடிக்களில் சோ்க்கை பெற முடியும்.