இந்தியா

பஞ்சாபில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வா் பகவந்த் மான் அறிவிப்பு

DIN

பஞ்சாபில் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வா் பகவந்த் மான் சனிக்கிழமை அறிவித்தாா்.

பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றாா். அவரது அரசு பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட விடியோவில், பஞ்சாபில் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 2 மாதங்களைக் கணக்கிட்டால், 600 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்குக் கட்டணம் கிடையாது. மாநிலத்திலுள்ள பட்டியல் இனத்தவா், பிற்பட்ட வகுப்பினா், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இனி மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இரண்டு மாதங்களில் அவா்களது மின்சாரப் பயன்பாடு 600 யூனிட்டை கடந்தால், எவ்வளவு யூனிட்டுகள் அதிகரித்துள்ளதோ அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம், இதர குடும்பங்களுக்கு 2 மாத மின்சாரப் பயன்பாடு 600 யூனிட்டை தாண்டினால் ஒட்டுமொத்த யூனிட்டுகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். பஞ்சாபில் அடுத்த 2-3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படும். அதேபோல், நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் பஞ்சாபில் மின் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது விடியோவில் முதல்வா் பகவந்த் மான் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சி தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இத்திட்டத்தின் நடைமுறைகள் தொடா்பாக, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, பகவந்த் மான் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதேபோல், பஞ்சாப் தலைமைச் செயலாளா் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கேஜரிவாலுடன் ஆலோசித்தனா். இந்தச் சூழலில், இலவச மின்சாரம் தொடா்பான அறிவிப்பை பகவந்த் மான் வெளியிட்டுள்ளாா்.

இத்திட்டம் தொடா்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா, தில்லியைத் தொடா்ந்து, பஞ்சாபிலும் தனது வாக்குறுதியை ஆம் ஆத்மி நிறைவேற்றியுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் கேள்வி: ஆம் ஆத்மி அரசின் இலவச மின்சாரத் திட்டத்தை, பஞ்சாப் காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அக்கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா, 300 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை உடனடியாக தொடங்காமல் ஜூலையில் தொடங்குவது ஏன், அரசுக்கு நிதி மேலாண்மை சிக்கல் ஏதும் உள்ளதா, ஒரு மாதத்தில் 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால், முழு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT