மழைநீர் தேங்கியுள்ளதன் காரணத்தினால் தில்லியில் நடைபெறவிருந்த உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி உருவாக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியினை உருவாக்கும் நிகழ்வு தில்லி அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று (ஆகஸ்ட் 4) இந்த நிகழ்வு பள்ளி மாணவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட இருந்தது. இந்த நிகழ்வு தில்லியில் உள்ள புராரி திடலில் நடைபெற இருந்தது. கடந்த சில தினங்களாக தில்லியில் கனமழை பெய்து வருவதால் இந்த நிகழ்வு நடைபெற இருந்த புராரி திடலில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த நிகழ்வு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் மாணவர்களால் இந்த சாதனை முயற்சி நிகழ்த்தப்படும் என முதல்வர் அரவிந்த கேஜரிவால் அறிவித்திருந்தார். மேலும், இந்த நிகழ்வில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த சூழலில் இந்த நிகழ்வு மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கனமழை பெய்து வரும் நேரத்தில் பள்ளி மாணவர்களைக் கொண்டு மிகப் பெரிய நிகழ்வினை ஏற்பாடு செய்வது என்பது அவர்களது உடல் நலத்தைப் பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.