இலவசங்களை விநியோகிக்கும் முன்பொருளாதார நிலையை மதிப்பிடுவது அவசியம்: உச்சநீதிமன்றத்தில் வாதம்
இலவசங்களை விநியோகிக்கும் முன் மாநில அரசுகள் பொருளாதார தாக்க மதிப்பீட்டை கருத்தில் கொள்வது அவசியம் என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இலவசங்களை விநியோகிக்கும் முன் மாநில அரசுகள் பொருளாதார தாக்க மதிப்பீட்டை கருத்தில் கொள்வது அவசியம் என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
நிகழாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிநிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை ஏற்படுத்த வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா ஆஜராகி வாதிட்டாா். அவா் வாதிடுகையில், ‘நிதிநிலையை முழுமையாக ஆராயாமல், மாநில அரசுகள் இலவசங்களை விநியோகிப்பதற்கு ஏற்கெனவே இரு உயரிய பொருளாதார அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இலவசங்களை விநியோகிக்கும் முன்பாக மாநில அரசுகள் பொருளாதார தாக்க மதிப்பீட்டை கருத்தில் கொள்வது அவசியம். ஆகையால், இதனை கண்காணிக்க நிபுணா் குழு ஏற்படுத்தப்பட வேண்டும்’ என வாதிட்டாா்.