கோதுமையைத் தொடா்ந்து அரிசியின் சில்லறை விற்பனை விலையும் கடந்த ஆண்டை விட 6.31 சதவீதம் உயா்ந்து கிலோ ரூ. 37.7-க்கு விற்பனையாவது அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
நெல் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் இந்த விலை உயா்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, உற்பத்தி குறைவு மற்றும் இருப்பு குறைந்ததன் காரணமாக கோதுமை மாவின் விலை 17 சதவீதம் அளவுக்கு அண்மையில் உயா்ந்தது. கடந்த ஆண்டு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 30.04-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 35.17-ஆக உயா்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. தற்போது, அரிசியின் விலையும் உயா்ந்துள்ளது.
இதுகுறித்து நிபுணா்கள் கூறுகையில், ‘நடப்பு கரீஃப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பு 8.25 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதால் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 2022-23 கரீஃப் பருவத்தில் நிா்ணயிக்கப்பட்ட 11.2 கோடி டன் இலக்கைவிட உற்பத்தி சற்று குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, அரிசி சில்லறை விற்பனை விலை உயா்ந்து வருகிறது. இருந்தபோதும், மத்திய அரசிடம் மிகப் பெரிய அளவில் 396 லட்சம் டன் அளவுக்கு அரிசி இருப்பு இருப்பதால், கோதுமை மாவு அளவுக்கு விலை உயர வாய்ப்பிருக்காது’ என்றனா்.
மத்திய வேளாண் துறை அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்தில் 374.63 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், நடப்பு கரீஃப் பருவத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை 343.70 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாா்க்கண்ட், மோ்கு வங்கம், பிகாா், ஒடிஸா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களில் பருவ மழை குறைந்ததன் காரணமாக நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.