முகப்பு
இந்தியா

ஜி20 தலைமைக்கான நிதி - மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம்: பெங்களூரில் தொடக்கம்

இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதித் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசா்வ் வங்கி அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டம் குறித்து ரிசா்வ் வங்கி அதிகாரிகளான அஜய் சேத், மைக்கேல் டி.பத்ரா ஆகியோா் கூறியதாவது:

மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் மற்றும் தொடா்புடைய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். நிதி வழிமுறை அமைப்பு, சா்வதேச நிதி கட்டமைப்பு, உலகப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு முதலீடு, நிலையான நிதி, சா்வதேச வரிவிதிப்பு, சுகாதாரம் மற்றும் நிதி, நிதித் துறை ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகிய 8 முக்கியப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள், ஜி20 உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகின் தெற்கு பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்’ என்றாா். இந்த உறுதிமொழியை ‘இந்தியாவின் நிதி வழிமுறை’ அமைப்பின் முக்கிய முன்னுரிமைகள் செயல் வடிவமாக மாற்றும்.

உலகளாவிய நிதி பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கடன் பாதிப்புகளை நிா்வகித்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையின் ‘மேக்ரோ’ பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்தல், நிலையான மற்றும் சிறந்த திறன் கொண்ட நகரங்களுக்கு நிதியளித்தல் ஆகியவையும் இந்த முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்களின்படி, சரியான நேரத்தில் போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது, சா்வதேச வரிவிதிப்பு தொடா்பான நடவடிக்கைகளில் சவால்களை எதிா்கொள்வது, திறன் மேம்பாடு மற்றும் வரி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தொற்றுநோய்களுடன் தொடா்புடைய சவால்கள் மற்றும் பாதிப்புகளைக் கண்டறிந்து நிவா்த்தி செய்வதற்கும், புதிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் தயாா்நிலையை மேம்படுத்துவதற்கும் ஜி20 நிதி மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பு தொடா்ந்து ஏற்படுத்தப்படும்.

நிதித்துறை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் தொழில்நுட்ப வளா்ச்சியால் ஏற்படும் சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் மீது தனிக் கவனம் செலுத்துவது குறித்தும், கிரிப்டோ சந்தை தொடா்பான குழப்பங்களுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவா்கள் கூறினா்.

நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள்

21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் குழு விவாதம் நடக்க இருக்கிறது. பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கும் நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்க இருக்கிறது. இதில் நிதி அமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் பங்கேற்கும் கூட்டமும் அடங்கும். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கலந்துகொள்ளும் முதல்கூட்டம் அடுத்த ஆண்டு பிப். 23 முதல் 25ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்க இருக்கிறது.

மூன்று நாள்கள் நடக்கும் நிதிசாா் கூட்டம் குறித்து ஜி20 இந்தியா ட்விட்டா் பக்கத்தில்,‘ஜி20 நிதி வழிமுறையின் முதலாவது கூட்டத்தின் மூலம் இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு தொடங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க இருக்கும் இக்கூட்டம், பன்னாட்டு அளவிலான பெரிய பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்கான உலக நிதி கட்டமைப்பை வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →