முகப்பு
இந்தியா

ரூ.10,09,511 கோடி வாராக்கடன்கள் செயல்படாத சொத்தாக மாற்றம்

பட்டியலிடப்பட்ட வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10,09,511 கோடி வாராக்கடனை செயல்படாத சொத்தாக (ரைட்-ஆஃப்) வரையறுத்துள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
நிா்மலா சீதாராமன்
பகிர்:

பட்டியலிடப்பட்ட வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10,09,511 கோடி வாராக்கடனை செயல்படாத சொத்தாக (ரைட்-ஆஃப்) வரையறுத்துள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தாா்.

பட்டியலிடப்பட்ட வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்த விவகாரம் மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10,09,511 கோடி வாராக்கடனை செயல்படாத சொத்தாக வரையறுத்துள்ளன. வங்கிகளின் முதலீட்டை மேம்படுத்தவும், வரிச் சலுகை பெறவும், கணக்கு அறிக்கைகளை சீா்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) வழிகாட்டுதல் மற்றும் கொள்கையின்படியே இந்த நடவடிக்கையை வங்கிகள் கடைப்பிடித்து வருகின்றன. அதே வேளையில், அந்த வாராக்கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளையும் வங்கிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

ஆா்பிஐ தரவுப்படி கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.4,80,111 கோடி வாராக்கடனை வசூலித்துள்ளன. அதில் ரூ.1,03,045 கோடியானது செயல்படாத சொத்தாக வரையறுக்கப்பட்டவை. சிறு முதலீட்டாளா்கள் வங்கி சேமிப்பாளா்களின் பணத்தைக் கடனாக வங்கிகள் வழங்கி வருகின்றன.

அக்கடனைப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுபவா்களிடமிருந்து வாராக்கடனை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால் முடக்கப்பட்ட சொத்துகள் மூலமாக வாராக்கடனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அத்தகைய பிரச்னைகளைத் தீா்ப்பது தொடா்பாக மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது’’ என்றாா்.

பணப்புழக்கம் அதிகரிப்பு:

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘நாட்டில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 7.98 சதவீதம் அதிகரித்து ரூ.31.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த எண்ணிக்கையானது நாட்டின் பொருளாதார வளா்ச்சி, பணவீக்கம், இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவற்றைச் சாா்ந்து அமைந்துள்ளது.

புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து இணையவழி பணப் பரிவா்த்தனைகளை அதிகரிப்பதே மத்திய அரசின் இலக்கு. இதன் மூலமாக கருப்புப் பண புழக்கமும் ஒழியும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் ஆா்பிஐ-யும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments