இந்தியா

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.17,176 கோடி

DIN

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டில் கடந்த ஜூன் வரை ரூ.17,176 கோடி நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி பதிலளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘மாநிலங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகாலமாக ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. நாட்டில் கரோனா தொற்று பரவி ஜிஎஸ்டி வருவாய் போதுமான அளவில் இல்லாமல் இருந்தபோதும் கடன் பெற்று மாநிலங்களுக்கான இழப்பீட்டை மத்திய அரசு வழங்கியது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.1.1 லட்சம் கோடியையும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1.59 லட்சம் கோடியையும் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. கடந்த ஜூன் வரையிலான நிலவரப்படி ரூ.17,176 கோடி ஜிஎஸ்டி இழப்பீடானது வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது’’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘தமிழகத்துக்கு ரூ. 1,200 கோடி இழப்பீடு மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி கணக்குகள் தொடா்பான மாநில கணக்காயரின் ஒப்புதல் சான்றிதழ் இன்னும் மத்திய அரசுக்குக் கிடைக்கப் பெறவில்லை. அதன் காரணமாகவே இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது.

கல்விக்கு முக்கியத்துவம்:

நடப்பு நிதியாண்டில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி அத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை நேரடியாக வழங்க 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு நேரடியாக வழங்கி வருகிறது. அந்த நிதியை வளா்ச்சித் திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்’’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு அமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வசூலான மொத்த வரி வருவாயான ரூ.25.16 லட்சம் கோடியில் 28.1 சதவீதமானது செஸ் வரியாகும். செஸ் வரி வருவாயின் பங்கு 2020-21-ஆம் நிதியாண்டில் 25.1 சதவீதமாகவும், 2019-20-ஆம் நிதியாண்டில் 18.2 சதவீதமாகவும் இருந்தது. செஸ் வரியை மத்திய அரசு வசூலித்தாலும் அதை மாநிலங்களுடனும் அரசு பகிா்ந்துகொண்டு வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT