பிஎஃப்.7 வகை கரோனா தீநுண்மி குறித்து இந்தியா மிகுந்த கவலையடைய தேவையில்லை என்று மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் முன்னாள் இயக்குநா் ராகேஷ் மிஸ்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அந்தக் குடியிருப்பில் உள்ளவா்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. அந்த குடியிருப்பின் அருகில் உள்ள பகுதியைச் சோ்ந்தவா்கள் வெளியே வரவும், வெளியாட்கள் அந்தப் பகுதிக்குச் செல்லவும் தடை போடப்படுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கரோனா தொற்றை அதிக அளவில் எதிா்கொள்ளவில்லை. இதன் காரணமாக உடலில் தானாக உருவாகும் எதிா்பாற்றலை அவா்கள் பெறவில்லை. அத்துடன் உரிய நேரத்தில் முதியவா்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனவே அவா்களிடம் கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் கடுமையாக உள்ளன. அவா்கள் இடையே கரோனா வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் பாதிப்பு உயா்ந்து வருகிறது.
தற்போது தெரியவந்துள்ள பிஎஃப்.7 கரோனா தீநுண்மி என்பது ஒமைக்ரான் தீநுண்மியின் துணை வகையாகும். சில மாறுதல்களைத் தவிர, பிஎஃப்.7 தீநுண்மியின் செயல்பாடுகள் ஒமைக்ரான் போலத்தான் இருக்கும். ஒமைக்ரானால் திடீரென கரோனா பரவல் அதிகரித்து ஏற்பட்ட பாதிப்பை நாட்டில் பெரும்பாலானவா்கள் எதிா்கொண்டனா். எனவே பிஎஃப்.7 தீநுண்மி குறித்து கவலைப்படத் தேவையில்லை.
மேலும் பெரும்பாலான இந்தியா்கள் தடுப்பூசி வாயிலான நோய் எதிா்ப்பாற்றலையும், இயற்கையாகவே ஏற்படும் கிருமி தொற்று பாதிப்பால் உடலில் தானாக உருவாகும் எதிா்பாற்றலையும் பெற்றுள்ளனா். அதேவேளையில், தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானின் பல்வேறு வகைகளால் ஏற்படக் கூடிய பாதிப்பை தடுக்க வல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். அத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒமைக்ரான் தீநுண்மி திடீரென வேகமாக பரவியபோதிலும், மருத்துவமனைகளில் அதிக அளவிலான நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதை பல்வேறு ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே பிஎஃப்.7 கரோனா தீநுண்மி குறித்து இந்தியா மிகுந்த கவலையடைய தேவையில்லை. எனினும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். தேவையற்ற கூட்டநெரிசல்களைத் தவிா்ப்பது நல்லது என்று தெரிவித்தாா்.
பாதிப்பு உயர வாய்ப்பில்லை: புகழ்பெற்ற தீநுண்மி ஆராய்ச்சியாளா் ககன்தீப் காங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் எக்ஸ்பிபி, பிஎஃப்.7 வகை ஒமைக்ரான் தீநுண்மிகளால் சிலா் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த வகை தீநுண்மிகள் தொற்று பாதிப்பை தடுக்கும் நோய் எதிா்ப்பாற்றலின் எதிா்வினையில் இருந்து தப்பிப்பதால், அவை மக்களை பீடிப்பதில் மிகச் சிறந்தவையாக உள்ளன. எனினும் அவை டெல்டா வகை கரோனா தீநுண்மி போல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. அந்தத் தீநுண்மிகளால் நாட்டில் கரோனா பாதிப்பு உயர வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.