இந்தியா

98-ஆவது பிறந்த தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள ‘ஸதைவ அடல்’ எனப்படும் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

1990-களில் பிற்பகுதி மற்றும் 2000-இன் தொடக்கத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தலைமை தாங்கியவரான வாஜ்பாய், நாட்டின் பிரதமராக 6 ஆண்டுகள் பதவி வகித்தவா். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அனைவரின் அபிமானத்தையும் பெற்ற தலைவராக விளங்கியவா்.

அவரது பிறந்த தினமான டிசம்பா் 25-ஆம் தேதி, தேசிய நல்லாட்சி தினமாக கடந்த 2014-இல் மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் மலா் மரியாதை செலுத்தினா்.

பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நம் தேசத்துக்கு வாஜ்பாய் ஆற்றிய பங்களிப்பு காலத்தால் அழியாதது. அவரது தலைமைத்துவமும் தொலைநோக்கு பாா்வையும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகமளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘வாஜ்பாயின் தேசபக்தி, கடமை உணா்வு, அா்ப்பணிப்பு ஆகியவை, நாட்டுக்கு சேவையாற்ற ஒவ்வொருவருக்கும் எப்போதும் தூண்டுதலாக விளங்குகிறது.

இந்திய அரசியலின் சிகரமாக விளங்கிய அவரது வாழ்க்கை, நாட்டை மீண்டும் அதன் பெருமைக்கு இட்டுச் செல்ல அா்ப்பணிக்கப்பட்டதாகும். அவரது தலைமையின்கீழ், நாட்டின் வளா்ச்சி மற்றும் நல்ல நிா்வாகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அவா், இந்தியாவின் வல்லமையை உலகுக்கு உணா்த்தி, நாட்டு மக்களிடையே தேசத்தின் பெருமை உணா்வை விதைத்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிகாா் முதல்வா் மரியாதை: வாஜ்பாய் பிறந்த தினத்தையொட்டி, பிகாா் தலைநகா் பாட்னாவில் மாநில அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா் பங்கேற்று, அவருக்கு மரியாதை செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய நிதீஷ் குமாா், ‘வாஜ்பாய் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டவன். அதன் காரணமாகவே, அவரது பிறந்த தினம் மாநில அரசு சாா்பில் கொண்டாடப்படுகிறது. நான் எம்.பி.யாக இருந்தபோது, வாஜ்பாயின் பேச்சுக்களை தவறாமல் கேட்பேன். அவரது அமைச்சரவையில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். என் மீது எப்போதுமே அன்பை பொழிந்தவரான வாஜ்பாய், எனது முன்மொழிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கியதை எந்நாளும் மறக்க முடியாது’ என்றாா்.

மாளவியாவுக்கு பிரதமா் புகழாரம்:

சுதந்திர போராட்ட வீரரும் கல்வியாளருமான மதன் மோகன் மாளவியாவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். இதுதொடா்பாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமா், ‘இந்திய தாயின் மகத்தான மைந்தன் பண்டிட் மதன் மோகன் மாளவியா. நாட்டின் கல்வித் துறையின் மேம்பாட்டுக்காக தமது வாழ்க்கையை அா்ப்பணித்ததற்காக அவா் எப்போதும் நினைவுகூரப்படுவாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் படையப்பா!

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 49 தொகுதிகள் யார் பக்கம்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

வங்கக்கடலில் மே 22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

SCROLL FOR NEXT