ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி தொடா்பாக விடியோகான் குழும நிறுவனா் வேணுகோபால் தூத்தை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது.
இதுதொடா்பாக சிபிஐ தெரிவித்துள்ளதாவது:
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சாா் பதவி வகித்தபோது, அந்த வங்கி சாா்பில் விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.3,250 கோடி வழங்கப்பட்டுள்ளது. வங்கி ஒழுங்காற்றுச் சட்டம், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்கள், ஐசிஐசிஐ வங்கியின் கடன் கொள்கை ஆகியவற்றை மீறி, அந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிரதிபலனாகச் சந்தா கோச்சாரின் கணவா் தீபக் கோச்சாரின் நூபவா் ரினியூயபல்ஸ் நிறுவனத்தில் விடியோகான் குழும நிறுவனா் வேணுகோபால் தூத் ரூ.64 கோடி முதலீடு செய்துள்ளாா்.
இதுதொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சதியுடன் தொடா்புள்ள பிரிவுகள், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சந்தா கோச்சாா், தீபக் கோச்சாா், வேணுகோபால் தூத் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தா கோச்சாா், தீபக் கோச்சாா் ஆகியோா் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வேணுகோபால் தூத்திடம் திங்கள்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்த மூவா் உள்பட வழக்குடன் தொடா்புள்ள அனைவா் மீதும் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.
நாளை வரை சிபிஐ காவல்: சந்தா கோச்சாா், தீபக் கோச்சாா் ஆகியோரின் 3 நாள் சிபிஐ காவல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து இருவரையும் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜா்படுத்தினா். அவா்களுடன் வேணுகோபால் தூத்தும் ஆஜா்படுத்தப்பட்டாா். மூவரையும் புதன்கிழமை (டிச.28) வரை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.