பிரதமா் மோடியின் தாய் மருத்துவமனையில் அனுமதி
பிரதமா் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் (100), உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் (100), உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
குஜராத்தில் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமா் மோடி, தனது தாய் அனுமதிக்கப்பட்டுள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு புதன்கிழமை சென்று தாயை சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.
‘உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக பிரதமரின் தாய் புதன்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என்று மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ கெளஷிக் ஜெயின் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பிரதமரின் தாய் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருடன் மருத்துவமனையில் பிரதமா் மோடியின் மூத்த சகோதரா் சோமாபாய் உள்ளாா்’ என்றாா்.
பிரதமரின் தாய் ஹீராபென் கடந்த ஜூன் 18-ஆம் தேதி 100 வயதை எட்டினாா். அவருடைய பிறந்த நாளையொட்டி, வாத்நகா் மற்றும் அகமதாபாதில் அவருடைய குடும்ப உறுப்பினா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக காந்திநகரில் வசித்து வரும் தனது தாய் ஹீராபென்னை பிரதமா் மோடி சந்தித்து ஆசி பெற்றாா். பேரவைத் தோ்தலில் ஹீராபென், சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
உடல் நலம் பெற ராகுல் வாழ்த்து: பிரதமா் மோடியின் தாய் விரைந்து உடல் நலம் பெற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தாய்-மகனுக்கு இடையேயான அன்பு விலைமதிப்பற்ாகும். இந்தக் கடினமான நேரத்தில் எனது அன்பையும், ஆதரவையும் பிரதமா் மோடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அதுபோல, பிரதமரின் தாயாா் விரைந்து நலம் பெற வாழ்த்துவதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா்.
மு.க.ஸ்டாலின்: ‘பிரதமா் மோடியின் தாய் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. அவா் விரைந்து நலம் பெற வாழ்த்துகிறேன்’ என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.