40 நாடுகளுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி நாளை தொடக்கம்
40 நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை நடத்தும் ‘மிலன் -2022’ கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
40 நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை நடத்தும் ‘மிலன் -2022’ கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
பிப். 25-ஆம் தேதிமுதல் 28-ஆம் தேதி வரையில், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் முதல் கட்டப் பயிற்சி நடக்கிறது. கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்டப் பயிற்சி மாா்ச் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 75-ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்தியா, ‘மிலன் 2022’ பயிற்சி மூலம் தனது சாதனையை நட்பு நாடுகளுடன் பகிா்ந்து கொள்கிறது. தோழமை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை இந்தாண்டு மிலன் கூட்டுப் பயிற்சியின் கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுப்புள்ள கடல்சாா் நாடாக உலக நாடுகளுக்கு காட்சிப்படுத்துவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம். இந்தப் பயிற்சி மூலம் நட்பு நாடுகளின் கடற்படை திறன்கள் மேம்படுத்தப்படும்.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மிலன் கூட்டுப் பயிற்சி முதன்முதலில் கடந்த 1995-ஆம் ஆண்டு அந்தமான் மற்றும் நிகோபா் கடற்படை கட்டுப்பாட்டு மையத்தால் ஏற்படுத்தப்பட்டது. 2020-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மிலன் கூட்டுப் பயிற்சி, கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
முதலில் இந்தோனேஷியா, சிங்கப்பூா், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. கிழக்கு கொள்கை, சாகா் திட்டம் மூலம் தற்போது இந்தப் பயிற்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 14 நாடுகள் பங்கேற்றன. தற்போது இந்த மிலன் கூட்டுப் பயிற்சி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 40 நாடுகளின் போா்க் கப்பல்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் குழுவினா் இந்தாண்டு மிலன் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனா் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.