இந்தியா

போதிய அதிகாரிகளை மத்திய பணிக்கு மாநிலங்கள் அனுப்புவதில்லை: ஐஏஎஸ் பணியிடமாற்ற விதிகள் திருத்தம் குறித்து மத்திய அரசு விளக்கம்

‘போதிய எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு மாநில அரசுகள் அனுப்புவதில்லை.

DIN

‘போதிய எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு மாநில அரசுகள் அனுப்புவதில்லை. அதன் காரணமாக, அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன’ என்று ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற விதிகளில் மேற்கொள்ள உள்ள திருத்தங்களுக்கான காரணமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில் ஐஏஎஸ் விதிகள் 1954-இல் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகளும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பிரதமருக்கு அண்மையில் கடிதம் எழுதினாா்.

இந்த நிலையில், ‘போதிய எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு மாநில அரசுகள் அனுப்புவதில்லை. அதன் காரணமாகவே, ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

மாநில அரசுகள் போதிய எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பாத காரணத்தால், மத்திய பணியில் இணைச் செயலா் பதவி வரையிலான ஐஏஎஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்துள்ளது.

இவ்வாறு மத்திய பணிக்கு அனுப்பப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-இல் 309-ஆக இருந்தது. தற்போது 223-ஆக குறைந்துள்ளது. அதாவது 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் திட்டங்களை வகுப்பதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் இதுபோன்ற அதிகாரிகளின் சேவையும், பணி அனுபவமும் அவசியமாகிறது. இவ்வாறு மத்திய பணிக்கு வரும் அதிகாரிகளின் பணித்திறன் மேம்படும் என்பதால், அதன்மூலம் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் பயனடைய முடியும்.

அந்த வகையில், அதிகாரிகள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அதிக எண்ணிக்கையலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுகளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. பின்னா், இதுதொடா்பாக அனைத்து மாநில அரசு தலைமைச் செயலா்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி, கடிதம் மூலமும் மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை கேட்டுக்கொண்டது. தொடா்ந்து டிசம்பா் 27, ஜனவரி 6 மற்றும் 12-ஆம் தேதிகளில் நினைவூட்டல் கடிதங்களும் அனுப்பப்பட்டன.

அவ்வாறு கடந்த 12-ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில், ஐஏஎஸ் விதிகள் 1954-இல் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பாக வருகிற 25-ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

SCROLL FOR NEXT