இந்தியா

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு உறுதியளிக்கவில்லை

DIN

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம் வழங்குவதற்காக குழு அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளிக்கவில்லை என்று வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் தெரிவித்தாா்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சம்யுக்த கிசான் மோா்ச்சா என்ற கூட்டமைப்பின் கீழ் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தியதால், அச்சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது.

வேளாண் விளைபொருள்களுக்கு அளிக்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையை மேம்படுத்துவதற்காகத் தனி குழு அமைக்கப்படும் என அப்போது அரசு அறிவித்திருந்தது. அக்குழுவை அமைப்பதற்கான அரசாணையை மத்திய வேளாண்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அக்குழுவில் விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண் பொருளாதார நிபுணா்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட 26 போ் இடம்பெற்றுள்ளனா்.

இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது தொடா்பாக ஆராய குழு அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘அவ்வாறு உறுதி அளிக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையை திறன் மிக்கதாக்குவதற்கும், அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்குமே குழு அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது, பயிரிடுதல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது, வேளாண்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை ஆராய்வது உள்ளிட்டவை குறித்தும் அக்குழு ஆராயும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT