முகப்பு
இந்தியா

இணையதள செய்தியாளர் ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

மத உணர்வுகளுக்கு எதிரான கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட இணையதள செய்தியாளர் முகமது ஜுபைருக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் பதிவான அனைத்து வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

மத உணர்வுகளுக்கு எதிரான கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட இணையதள செய்தியாளர் முகமது ஜுபைருக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் பதிவான அனைத்து வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
 மேலும், அவருக்கு எதிராக உத்தர பிரதேச அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவையும் கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 ஜுபைருக்கு எதிராக தில்லி போலீஸார் பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும், உத்தர பிரதேசத்தில் அவர் மீது பதிவான 7 வழக்குகளில் தனித் தனி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற வேண்டியிருந்ததால் அவர் சிறையில் இருந்தார்.
 அனைத்து வழக்குகளில் ஜாமீன் வழங்கக் கோரி ஜுபைர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூரிய காந்த், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
 உத்தர பிரதேசத்தில் பதிவான அனைத்து வழக்குகளில் இருந்து ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் தில்லி போலீஸாரின் வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும். இதற்கான உத்தர பிரதேச போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு கலைக்கப்படுகிறது.
 தில்லி போலீஸார் பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்த பிறகும், அதே புகாருக்காக உத்தர பிரதேசத்தில் பதிவான வழக்குகளில் அவரை சிறையில் வைத்திருப்பது நியாயமானதல்ல.
 வரும் நாள்களில் ஜுபைர் ட்விட்டரில் பதிவிடக் கூடாது என உத்தர பிரதேச அரசு கேட்பது, வழக்குரைஞரை வாதிட அனுமதிக்கக் கூடாது என்பதுபோல் உள்ளது. ஜுபைர் சட்டத்தை மீறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், பத்திரிகையாளரை எப்படி எழுதக் கூடாது என்று சொல்ல முடியும்?
 ஜுபைருக்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டுகளில் இனியும் வழக்குகள் பதிவானால் இந்த ஜாமீன் அடிப்படையிலேயே அவரை விடுவிக்கலாம்' என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
 இந்த உத்தரவையடுத்து, தில்லி திகார் சிறையிலிருந்து ஜுபைர் விடுவிக்கப்பட்டார்.
 இறைத் தூதர் நபிகள் நாயகத்துக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா செய்தித் தொலைக்காட்சியில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை செய்தியின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் செய்தியாளரும், இணை நிறுவனருமான முகமது ஜுபைர் வெளியிட்டிருந்தார். நூபுர் சர்மாவுக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததால் அவரை கட்சியில் இருந்து பாஜக நீக்கம் செய்தது.
 இதையடுத்து, மத உணர்வுகளுக்கு எதிராக கருத்துகளை 2018-இல் ஜுபைர் பதிவிட்டதாக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →