பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கும் திட்டமில்லை: மாநிலங்களவையில் அரசு தகவல்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக குழு அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக குழு அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் அரசு சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக குழு அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் பொது சிவில் சட்டம் தொடா்பான பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்குமாறு இந்திய சட்ட ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.
பாலின, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பதை உறுதி செய்வதுதான் இதன் முக்கிய நோக்கம். இதனை ஏற்கும் மாநிலங்களும் தங்கள் பேரவைகளில் சட்டம் இயற்றிக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே போன்ற மற்றொரு கேள்விக்கு கடந்த 21-ஆம் தேதி அமைச்சா் ரிஜிஜு அளித்த பதிலில், ‘பொது சிவில் சட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இப்போதைக்கு அதனை அமல்படுத்த திட்டமில்லை’ என்று கூறியிருந்தாா்.
கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தலின்போது நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.