கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 228 சிலைகள் மீட்பு: மத்திய அமைச்சர்கள் பெருமிதம்
தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, அா்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தனா்.
கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் சொந்தமான 228 சிலைகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி ஆகியோர் புதன்கிழமை தெரிவித்தனர்.
மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சீரிய முயற்சியின் காரணமாக இந்தப் பெருமைக்குரிய விஷயம் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட பழைமையான சிற்பங்கள், சிலைகள் ஆகியவற்றை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழக காவல் துறையின் சிலை தடுப்புப் பிரிவு - சிஐடி பிரிவு மூலம் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மத்திய அரசும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வெண்கலம், கற்கலால் செதுக்கப்பட்ட 10 சிலைகள் மீட்கப்பட்டு, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருந்த இந்தச் சிலைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
"நடவடிக்கை தொடரும்': மீட்கப்பட்ட சிலைகளை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சி.சைலேந்திர பாபுவிடம் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி ஒப்படைத்துப் பேசியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இந்திய பாரம்பரியமிக்க சிலைகளை மீட்பதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அவரது அயராது நடவடிக்கையின் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் 228 தொல்பொருள்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழகத்தைச் சேர்ந்த தெய்வச் சிலைகள் உள்பட 10 வெண்கல, கற்சிலைகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் உள்ள முக்கிய நோக்கங்களில் நமது தொல்பொருள்களை மீட்பதும் ஒன்றாகும் என்றார் அவர்.
"பிரதமருக்கு நன்றி': மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில்,
"சோழர், விஜயநகர அரசின் காலத்தைச் சேர்ந்த பழங்காலச் தெய்வச் சிலைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட நிலையில், அவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தொடர் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளன. 2013- ஆம் ஆண்டு வரையிலும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. ஆனால், 2014 முதல் கடந்த 8 ஆண்டுகளிலில் மட்டும் 228 புராதன சிலைகள், தொல்பொருள்கள் வெளிநாடுகளில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தின் தொன்மைமிக்க 10 சிலைகளும் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகத்தின் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
தொடர்ந்து, மத்திய கலாசார துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய வெளியுறவு மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில், இந்திய தொல்லியல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலோக் திரிபாதி, துறையின் தலைமை இயக்குநர் வித்யாவதி, தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, சிலைத் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.அசோக் நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநர்கள் சுதர்ஸன், தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது வெளிநாடுகளில் இருந்து பழங்காலச் தெய்வச் சிலைகளை மீட்டதற்காக மத்திய அமைச்சர்களுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் என்.கண்ணன், தில்லி முத்தமிழ்ப் பேரவைச் செயலர் இரா. முகுந்தன் ஆகியோ ர் மரியாதை செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆனந்த், தன்வந்திரி ஆகியோர் அமைச்சர்களுக்கு கோயில் பிரசாதம்
வழங்கினர்.
மேலும் சிலைகள் மீட்கப்படும்: டிஜிபி சைலேந்திர பாபு
தில்லியில் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:
தமிழகத்தின் சிலைத் தடுப்புப் பிரிவின் பல்வேறு நடவடிக்கையால் 138 சிலைகள் பல்வேறு நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிலைகள், இந்தியத் தொல்லியல் துறை மூலம் தமிழக சிலைத் தடுப்புப் பிரிவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் பழைமையான, புராதன முக்கியத்துவம் வாய்ந்த சிலைகளாகும். இவற்றில் நடராஜர் சிலையானது புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து திருட்டுப் போனதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரியலார் மாவட்ட கோயிலைச் சேர்ந்த விஷ்ணு சிலையும் கிடைத்துள்ளது. இன்னும் சில சிலைகள் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிய வருகிறது. அதுபோன்ற எந்த சிலையாக இருந்தாலும் அவற்றை தமிழகத்துக்கு கொண்டு வர தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அவை மீட்கப்படும். தற்போதைய சிலைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்தச் சிலைகள் நீதிமன்றம் மூலம் இந்து அறநிலையத் துறை வாயிலாக அந்தந்தக் கோயில்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஒரே நேரத்தில் 10 சிலைகள் மீட்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறையாகும். மேலும், இதுபோன்ற சில சிலைகள் குறித்த விவரம் கிடைத்துள்ளது. அதையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
பேட்டியின் போது சிலை தடுப்புப் பிரிவு இயக்குநர் டிஜிபி ஜெயந்த் முரளி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.அசோக் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.