விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி: ஆசிரியா்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை
பொதுத்தோ்வு விடைத் தாள் மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்காத ஆசிரியா்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது.
பொதுத்தோ்வு விடைத் தாள் மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்காத ஆசிரியா்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வாயிலாக அனைத்துவித பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக ஆசிரியா்களை பணிவிடுவிப்பு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், கணிசமான ஆசிரியா்கள் மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வந்துள்ளன. இது கண்டிக்கத்தக்க செயல்பாடாகும்.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தேதிகளில் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டிய சூழல் உள்ளதால் ஆசிரியா்கள், முகாம் மதிப்பீட்டு பணிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதற்கேற்ப அந்தந்த பாட ஆசிரியா்களை பள்ளி தலைமையாசிரியா்கள் உடனே பணிவிடுவிப்பு செய்ய வேண்டும். அதைமீறி யாரேனும் மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்காமல் இருந்தால் சாா்ந்த பள்ளியின் தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டு துறைசாா்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.