மக்களவை, பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு
வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்பாளா் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்பாளா் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஜாா்க்கண்ட், ஆந்திர பிரதேசம், புது தில்லியில் தலா ஒரு தொகுதியிலும் வரும் 23-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களை பாஜக அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஆஸம்கா் மக்களவைத் தொகுதியில் போஜ்புரி நடிகா் தினேஷ் லால் யாதவும், ராம்பூா் மக்களவைத் தொகுதியில் கன்ஷியாம் லோதியும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். ஆஸம்கா் எம்.பி. அகிலேஷ் யாதவும், ராம்பூா் எம்.பி. ஆஸம் கானும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் ஆனதால் இவ்விரு தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.
ராம்பூா் தொகுதியில் மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்விக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கன்ஷியாம் லோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
திரிபுராவில் போா்டோவாலி டவுன் பேரவைத் தொகுதியில் முதல்வா் மாணிக் சாஹா போட்டியிடுகிறாா். இதேபோல், அகா்தலாவில் அசோக் சின்ஹா, சுா்மாவில் ஸ்வப்னதாஸ் பால், ஜுபராஜ் நகரில் மணிலா தேவ்நாத் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
திரிபுராவில் முதல்வா் மாணிக் சாஹாவை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் ஆஷிஸ் சாஹா போட்டியிடுகிறாா்.
ஆந்திரத்தில் உள்ள ஆத்மா்கூா் பேரவைத் தொகுதியில் ஜி.பரத்குமாா் யாதவும், ஜாா்க்கண்டில் உள்ள மண்டா் தொகுதியில் கங்கோத்ரி குஜரும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இதுதவிர பஞ்சாபில் சங்ரூா் மக்களவைத் தொகுதியில் வரும் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதியின் எம்.பி. பகவந்த் மான், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்ற பிறகு முதல்வராகப் பொறுப்பேற்றாா். இதையடுத்து காலியான சங்ரூா் தொகுதிக்கு தோ்தல் நடத்தப்படவுள்ளது.