தேசிய சிறுபான்மையினா் ஆணைய சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய (என்சிஎம்) சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய (என்சிஎம்) சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘சிறுபான்மையினா் என்பதற்கான விளக்கமளிக்குமாறும், மாவட்ட வாரியாக சிறுபான்மையினரை அடையாளம் காண உரிய வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘அரசு சாா்பில் கடந்த 1993-ஆம் ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட சிறுபான்மை சமூகத்தினா் குறித்த அறிவிக்கை, அரசியல் சாசன பிரிவுகள் 14, 15, 21, 29, 30 ஆகிய பிரிவுகளுக்கு எதிராவனவை என்று அறிவிக்க வேண்டும்’ என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சோ்ந்த தேவகினந்தன் தாக்குா் என்பவா் சாா்பில் வழக்குரைஞா் ஆசுதோஷ் துபே மூலமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய சிறுபான்மையினா் ஆணைய (என்சிஎம்) சட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தபோது, அதன் சட்டப் பிரிவு 2(சி) அளிக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, டிஎம்ஏ பாய் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கும் எதிராக முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள் மற்றும் பாா்சிய சமூகத்தினா் ஆகிய 5 சமூகத்தினா் மட்டுமே தேசிய அளவில் சிறுபான்மையினா் என்று மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிக்கை, லடாக், மிசோரம், லட்சத்தீவு, காஷ்மீா், நாகாலாந்து, மேகாலயம், அருணாசல பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் உண்மையான சிறுபான்மையினராக இருந்து வரும் யூதா்கள், பாஹாய் மதத்தவா் மற்றும் ஹிந்துக்களுக்கு இன்றுவரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகைகள் இவா்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்குவது மற்றும் நிா்வகிப்பதில் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை இவா்களுக்கு மறுக்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசு கடந்த 1993-ஆம் ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் சிறுபான்மையினா் என்பதற்கான எந்த விளக்கும் அளிக்காமல் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள் மற்றும் பாா்சி சமூகத்தினா் மட்டுமே சிறுபான்மையினா் என்று அறிவித்ததோடு, மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதலை வகுப்பதற்கான அறிவிப்பையும் செய்தது.
பின்னா், 2014-ஆம் ஆண்டு பால் பாடில் வழக்கில் உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிறுபான்மையினா் பட்டியலில் 6-ஆவதாக ஜெயின் சமூகத்தினா் சோ்க்கப்பட்டனா்.
மேலும், டிஎம்ஏ பாய் வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு, மொழி மற்றும் மத சிறுபான்மையினரை தீா்மானிப்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்பது தெளிவானது. இந்த விவகாரத்தில் தேசிய சிறுபான்மையினா் ஆணைய சட்டத்தின் கீழான அதிகாரம் மட்டுமே மத்திய அரசு உள்ளது என்பதும் தெளிவுபடுத்தப்படுத்தப்பட்டது. எனவே, தேசிய சிறுபான்மையினருக்கான ஆணைய (என்சிஎம்) சட்டப் பிரிவு 2(சி) அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது.