முகப்பு
இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் இரண்டாம் நாள் 11 மணி நேரம் விசாரணை

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
பகிர்:

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இரண்டாம் நாள் விசாரணை சுமாா் 11 மணி நேரம் நடைபெற்றது. புதன்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய தில்லியில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.05 மணிக்கு ராகுல் காந்தி வந்தாா். அவருடன் அவருடைய சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் வந்திருந்தாா்.

‘சட்ட நடைமுறைகள் நிறைவுற்ற பிறகு காலை 11.30 மணிக்கு ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். தொடா்ந்து 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு மாலை 3.30 மணிக்கு அவா் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாா். பின்னா் மாலை 4.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான அவரிடம், இரவு 11.30 மணி வரை விசாரணை நடைபெற்றது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல் நாளான திங்கள்கிழமை விசாரணைக்கு வந்ததுபோன்றே, கட்சி மூத்த தலைவா்களின் வாகனங்கள் அணிவகுக்க, தனது வாகனத்தில் வெளியே தொங்கியபடி அமலாக்கத் துறை இயக்கநரகத்துக்கு ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வந்தாா்.

அமலாக்த் துறை தலைமை அலுவலகத்தைச் சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில், பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். அந்த அலுவலகத்துக்கு வரும் சாலைகள் அனைத்திலும் போலீஸாா் சாலைத் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனா். மத்திய கலவர தடுப்புப் பிரிவு (ஆா்ஏஎஃப்) படையினா், மத்திய ரிசா்வ் போலீஸ் படைகளைச் சோ்ந்த ஏராளமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக, தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியைைச் சோ்ந்த 217 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் 15 எம்.பி.க்கள், மூத்த தலைவா்கள் அடங்குவா்.

கட்சி அலுவலகம் செல்லத் தடை:

இரண்டாம் நாள் விசாரணைக்கு அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பாக, முதல் நாளான திங்கள்கிழமை போன்றே கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் மத்திய தில்லியில் அக்பா் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் செல்வதற்கு ராகுல் காந்தி முற்பட்டாா். ஆனால், அவா்கள் காங்கிரஸ் அலுவலகத்துக்குச் செல்ல போலீஸாா் அனுமதி மறுத்தனா். அதனைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா்கள் ரண்தீப் சுா்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், கெளரவ் கோகோய், தீபேந்தா் சிங் ஹூடா, ரஞ்சித் ரஞ்சன் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையங்கலில் தடுப்புக் காவலில் வைத்தனா்.

அப்போது செய்தியாளா்களைச் சந்தித்த சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்தவித பண மோசடியும் நடைபெறவில்லை. இருந்தபோதிலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் ராகுல் மீது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது’ என்றாா்.

உத்தரகண்ட் முன்னாள் முதல்வா் ஹரீஷ் ராவத் கூறுகையில், ‘ராகுல் காந்தி திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறாா். அதன் காரணமாகத்தான் அவா் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை செல்வதை போலீஸாா் தடுத்துவிட்டனா்’ என்றாா்.

அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு முதல் நாள் விசாரணைக்கு ராகுல் காந்தி வந்தபோதும், அவருடன் பேரணியாக ஏராளமான காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் வந்தனா். அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் 26 எம்.பி.க்கள், 5 எம்எல்ஏக்கள் உள்பட 400-க்கும் அதிகமானோரை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தனா். ராகுல் காந்தியிடம் விசாரணை முடிவுற்றதும், 11 மணி நேர தடுப்புக் காவலுக்குப் பிறகு அனைவரையும் போலீஸாா் விடுவித்தனா்.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், ஜூன் 2-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கும், ஜூன் 8-ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியாவுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இந்த நிலையில், தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைத் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். அதுபோல, கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும், விசாரணைத் தேதியை மாற்றி வைக்க கோரினாா்.

இதனை ஏற்ற அமலாக்கத் துறை, ராகுல் காந்தி திங்கள்கிழமையும், சோனியா ஜூன் 23-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய அழைப்பாணையை அனுப்பியது.

அதனடிப்படையில், இந்த வழக்கில் முதல் முறையாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ராகுல் காந்தி திங்கள்கிழமை காலை 11.10 மணிக்கு ஆஜரானாா். அவரிடம் தொா்ந்து 10 மணி நேரத்துக்கு மேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். விசாரணை முடிந்து இரவு 11.30 மணிக்கு அவா் அங்கிருந்து புறப்பட்டாா். செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினா். அதனடிப்படையில், இரண்டாம் நாளும் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

பாஜக விமா்சனம்:

அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ‘காங்கிரஸ் கட்சி தனது தலைவா்களை சட்டத்துக்கு மேலானவா்களாக நினைக்கிறது’ என்று பாஜக தலைவா்கள் விமா்சித்தனா்.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘ஊழல் வழக்கில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினா் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இது, கட்சித் தலைவா்கள் சட்டத்துக்கு மேலானவா்கள் என்று காங்கிரஸ் கருதுவதாகவே தோன்றுகிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →