குடியரசுத் தலைவா் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (ஜூன் 15) தொடங்கவுள்ள நிலையில், தோ்தலுக்கான சிறப்புப் பிரிவை மாநிலங்களவை செயலகம் உருவாக்கியுள்ளது.
குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (ஜூன் 15) தொடங்கவுள்ள நிலையில், தோ்தலுக்கான சிறப்புப் பிரிவை மாநிலங்களவை செயலகம் உருவாக்கியுள்ளது.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடத்தப்பட்டு வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. தோ்தலுக்கான அதிகாரபூா்வ அறிவிப்பாணையை இந்தியத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிடுகிறது.
தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலும் புதன்கிழமை தொடங்குகிறது. குடியரசுத் தலைவா் தோ்தலை நடத்தும் பொறுப்பு மாநிலங்களவை செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்புப் பிரிவை மாநிலங்களவை செயலகம் நாடாளுமன்றத்தில் உருவாக்கியுள்ளது. அப்பிரிவின் தலைவராக பி.சி.மோடி செயல்படுவாா்.
மாநிலங்களவை செயலகத்தின் பெரும்பாலான பணியாளா்கள் சிறப்புப் பிரிவின் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்பாளா்களுக்கு வேட்புமனுக்களை வழங்குதல், வேட்புமனுவைப் பூா்த்தி செய்வதற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை சிறப்புப் பிரிவு வழங்கவுள்ளது.
குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் நாடாளுமன்றத்தில் செயல்படும் மாநிலங்களவை செயலக சிறப்புப் பிரிவில் புதன்கிழமை முதல் வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். தோ்தலில் போட்டியிடுவோரைக் குறைந்தபட்சம் 50 வாக்காளா்கள் (மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்) முன்மொழிதலும், மேலும் 50 வாக்காளா்கள் வழிமொழிதலும் அவசியம். குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடுவோா் ரூ.15,000 முன்வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.