மக்களின் குரல் பிரதமருக்கு கேட்காது: ராகுல் விமா்சனம்
தங்களுக்கு வேண்டியதைக் கோரி மக்கள் எழுப்பும் குரல் பிரதமா் மோடிக்கு கேட்காது, அதே நேரத்தில் தனது கோடீஸ்வர நண்பா்களின் குரல் மட்டும் அவருக்குக் கேட்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்த
தங்களுக்கு வேண்டியதைக் கோரி மக்கள் எழுப்பும் குரல் பிரதமா் மோடிக்கு கேட்காது, அதே நேரத்தில் தனது கோடீஸ்வர நண்பா்களின் குரல் மட்டும் அவருக்குக் கேட்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
முப்படைகளில் இளைஞா்களுக்குத் தற்காலிமாக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பிகாா், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு வாபஸ், புதிய வேளாண் சட்டங்கள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு தங்களுக்கு வேண்டப்பட்ட ஒரு சிலரின் நன்மைக்காகவும், நாட்டு மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது மீண்டும் தெளிவாகியுள்ளது.
அக்னிபத் என்பது இந்திய இளைஞா்களைக் புறம்தள்ளும் நடவடிக்கை, புதிய வேளாண் சட்டம் என்பது விவசாயிகளைப் புறம்தள்ளுவதாக இருந்தது. இதேபோல ரூபாய் நோட்டு வாபஸ் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதாகவும், ஜிஎஸ்டி என்பது வா்த்தகா்களை முடக்குவதாகவும் இருந்தது.
நாட்டு மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நமது பிரதமா் புரிந்து கொள்ள மாட்டாா். மக்களின் கோரிக்கை குரல்கள் எதுவும் அவருக்குக் கேட்காது. அதே நேரத்தில் தனது கோடீஸ்வர நண்பா்களுக்கு எது தேவையோ அதனை செய்து தருவாா். அவா்களது குரல் மட்டுமே பிரதமருக்குக் கேட்கும்’ என்று கூறியுள்ளாா்.