முகப்பு
இந்தியா

போராட்டம் தணியுமா? அக்னி வீரர்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு

அக்னி வீரர்களுக்கு, மத்திய ஆயுதப் படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:


மத்திய ஆயுதப் படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவில் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த மூன்று நாள்களாக இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டன. நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் ஆகி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டம் இளைஞர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டது என ஆளும் தரப்பில் விளக்கமளித்தபோதிலும், போராட்டங்களிலிருந்து இளைஞர்கள் பின்வாங்கவில்லை.

இந்த நிலையில், மத்திய ஆயுதப் படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவிலுள்ள காலியிடங்களில் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பிலிருந்து 3 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முதல் பிரிவு அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தை சற்று தணிக்கவே மத்திய அரசிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை பிரதமர் நரேந்திர மோடி 21-இல் இருந்து 23 ஆக உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டார்.

அக்னிபத்:

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதிலிருந்து 21 வயதுக்கு உள்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டு பணிக்குச் சேர்த்துக் கொள்ளும் அக்னிபத் திட்டத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பனிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

முழு கட்டுரையைப் படிக்க →