புது தில்லி: ஹவாலா பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2015-16 ஆண்டுகளில் அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகித்தபோது, அவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களின் பெயா்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) மூலம் ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றது.
அந்தப் பணம் கொல்கத்தாவில் உள்ள ஹவாலா பண முகா்வா்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, தில்லிக்கு அருகே விவசாய நிலங்கள் வாங்கப்பட்டும், வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டும் உள்ளன என்று குற்றம்சாட்டி சிபிஐ ஆகஸ்ட் 25, 2017-இல் வழக்குப் பதிவு செய்தது.
நவம்பர் 2019 இல், சத்யேந்திர ஜெயின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ், சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி பூனம் ஜெயின் மற்றும் குடும்பத்தினரும் சோ்க்கப்பட்டனா். வருமான வரித்துறையினா் பணப் பரிவா்த்தனை தொடா்பான விசாரணையை நடத்தி, சத்யேந்தா் ஜெயினின் பினாமி சொத்துகளை முடக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்திருந்தனா்.
இதையடுத்து, அகின்சான் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்த பின்னர் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அமலாக்கத்துறை காவலில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.