13 கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா
குடியரசுத் தலைவர் தேர்தலில் 13 கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா (84) அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள்
குடியரசுத் தலைவர் தேர்தலில் 13 கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா (84) அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் இதை கூட்டாக அறிவித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தில்லியில் கடந்த 15-ஆம் தேதி தில்லியில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, சிவசேனை, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகிய இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவர்களும் போட்டியிட மறுத்துவிட்டனர்.
பொது வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், சரத் பவார் தலைமையில் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், 13 கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் சார்பில் அபிஷேக் பானர்ஜி, திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். சமாஜவாதி, தேசிய மாநாட்டுக் கட்சி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
பின்னர், கூட்டறிக்கையை வாசித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது நீண்ட நெடிய பொது வாழ்வில் சிறந்த நிர்வாகியாக, மத்திய நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், ஐஏஎஸ் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்திய குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகளைக் காக்கும் தகுதியான நபராக அவர் உள்ளார். எனவே, நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியான யஷ்வந்த் சின்ஹாவை தேர்ந்தெடுப்பதில் பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒருமாதத்துக்கு முன்பிருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகல்: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே திரிணமூல் காங்கிரஸிலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகினார்.
பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா, கடந்த 2018-இல் அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். கட்சியில் அவருக்குத் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானதையடுத்து, திரிணமூல் காங்கிரஸிலிருந்து அவர் விலகினார்.