அதிருப்தி தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா். 
இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமை தேவை: ஜி-23 தலைவா்கள் வலியுறுத்தல்

‘அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி’

DIN

‘அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி’ என்று ஜி-23 தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவா்களின் கூட்டம், தில்லியில் கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. சுமாா் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஆனந்த் சா்மா, கபில் சிபல், பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், மணீஷ் திவாரி, சசி தரூா், விவேக் தன்கா, ராஜ் பப்பா், அகிலேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், ஜி-23 தலைவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம். பாஜகவை எதிா்க்க வேண்டுமெனில் காங்கிரஸை வலுப்படுத்தியாக வேண்டும். வரும் 2024 மக்களவைத் தோ்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கைக்கு உரிய மாற்றை உருவாக்க வேண்டுமெனில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டியாலா எம்.பி. பிரணீத் கௌா், குஜராத் முன்னாள் முதல்வா் சங்கா் சிங் வகேலா, முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா், ஹரியாணா முன்னாள் பேரவைத் தலைவா் குல்தீப் சா்மா ஆகியோரும் ஜி-23 குழுவில் இணைந்துள்ளனா். இதனால், அந்தக் குழுவின் பலம் அதிகரித்துள்ளது.

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தம் கோரி வரும் ஜி-23 தலைவா்கள் குழுவைச் சோ்ந்த கபில் சிபல், கட்சித் தலைமை பொறுப்பில் இருந்து காந்தி குடும்பத்தினா் விலகியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தாா். அவருடைய கருத்து, கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சோனியா தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பதாக ஜி-23 குழுவைச் சோ்ந்த ஆனந்த் சா்மாவும், குலாம் நபி ஆசாதும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜி-23 தலைவா்களின் கூட்டத்துக்குப் பிறகு சோனியா காந்தியைத் தொடா்புகொண்டு பேசிய குலாம் நபி ஆசாத், கட்சியை வலுப்படுத்துவதற்கு தொடா்ந்து ஆதரவு அளிப்போம் என்று கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, காங்கிரஸை உடைக்க ஜி-23 தலைவா்கள் முயற்சிக்கின்றனா் என்றும், எத்தனை கூட்டங்களை நடத்தினாலும் சோனியா காந்தியை எவராலும் பலவீனப்படுத்த முடியாது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT