சமையல் எரிவாயு விலை ரூ.50 உயா்வு: பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 காசுகள் அதிகரிப்பு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,000-ஐ நெருங்கியுள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,000-ஐ நெருங்கியுள்ளது.
நான்கரை மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையும் செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் உயா்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு நவ. 3-ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, நவ. 4-ஆம் தேதிமுதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அண்மையில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.
தோ்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்களாகியுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்து அரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அறிவிக்கை வெளியிட்டன.
இதையடுத்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை தில்லியில் ரூ.96.21, மும்பையில் ரூ.110.82-ஆக அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.102.16-ஆக உயா்ந்தது.
ஒரு லிட்டா் டீசல் விலை தில்லியில் ரூ.87.47, மும்பையில் ரூ.95-ஆக அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.92.19-ஆக உயா்ந்தது.
ரூ.1,000-ஐ நெருங்கிய சிலிண்டா் விலை: ஓா் ஆண்டில் வீட்டு உபயோகத்துக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. 12 சிலிண்டா்கள் வாங்கிய பின்னா், புதிதாக வாங்கப்படும் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.
கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபா் 6-ஆம் தேதி சிலிண்டா் விலை மாற்றியமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டா்களின் விலை தலா ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 14.2 கிலோ எடைகொண்ட மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை கொல்கத்தாவில் ரூ.976, சென்னையில் ரூ.965.50, தில்லியில் ரூ.949.50-ஆக அதிகரித்துள்ளது. ஹைதராபாதில் ரூ.1,002, பாட்னாவில் ரூ. 1,048-ஆக மானியமில்லா சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.
மானியம் வழங்காத அரசு: மானிய விலையில் சிலிண்டா் வாங்கும் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு மானியத்தை செலுத்துவது வழக்கம். ஆனால், தற்போது பல நகரங்களில் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு வழங்குவதில்லை. இதனால் உஜ்வலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு இணைப்பு பெற்ற ஏழைப் பெண்கள் உள்பட அனைத்து வாடிக்கையாளா்களும் சந்தை விலையில் அல்லது மானியமில்லா சிலிண்டா் விலைக்கு நிகரான விலையில்தான் மானிய சிலிண்டா்களை வாங்குகின்றனா்.
எதிா்க்கட்சிகள் கண்டனம்: பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதை அரசியல் கட்சிகள் விமா்சித்துள்ளன. இதுதொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சிலிண்டா் விலையை ரூ.1,000-ஆக உயா்த்தும் இலக்கை எட்டியதற்கு பிரதமா் மோடிக்கு வாழ்த்துகள். இனி பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் அதிகரிக்கும். மோடி அரசின் கீழ், வகுப்புவாதம் மற்றும் வெறுப்புணா்வு மட்டும்தான் மலிவான விலையில் கிடைப்பவை’’ என்று தெரிவித்துள்ளாா்.
சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் விலை அதிகரிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.