இந்தியா

மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

DIN

மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவா் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்கக் கோரிய வழக்கில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீா்ப்பளித்துள்ளனா்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-ஆவது பிரிவு விதிவிலக்கு 2-இன்படி, மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவா் பாலியல் உறவு கொண்டால், அது பாலியல் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மகளிா் கூட்டமைப்பு, ஆா்ஐடி அறக்கட்டளை ஆகியவை சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-ஆவது பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ், மனைவியின் சம்மதமில்லாமல் பாலியல் உறவு கொள்வது வன்கொடுமை அல்ல என அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு, கணவா்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் திருமணமான பெண்களுக்கு பாகுபாடு காட்டுகிறது. எனவே, அந்த விதிவிலக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ராஜீவ் ஷாக்தா், ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராஜீவ் ஷாக்தா் கூறுகையில், ‘இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளான பிறகும், திருமணமான பெண்களின் நீதிக்கான கோரிக்கைக்கு செவிமடுக்காவிட்டால், அது துயரமானது ஆகும். கணவரால் மனைவி பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதை பாலியல் வன்கொடுமை என்றே அழைக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா்.

நீதிபதி ஹரி சங்கா், ‘இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது விதிவிலக்கு அரசமைப்புக்கு எதிரானது அல்ல. அது அந்தச் சட்டப் பிரிவு மற்றும் விதிவிலக்கின் பொருளில் உள்ள பகுத்தறிவுடன் கூடிய தெளிவான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது’ என்று தெரிவித்து விதிவிலக்கை ரத்து செய்வதற்கு எதிராக தீா்ப்பளித்தாா்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை அளித்தபோதிலும், வழக்குத் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருவரும் அனுமதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT