இந்தியா

மேற்கு எல்லைக்குள் நுழையும் ட்ரோன்கள் எண்ணிக்கை இரட்டிப்பு

DIN

பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழையும் ஆளில்லா சிறியரக விமானங்களின் (ட்ரோன்கள்) எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இயக்குநா் பங்கஜ் குமாா் சிங் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் தடயவியல் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிஎஸ்எஃப் இயக்குநா் பங்குஜ் குமாா் சிங் கூறுகையில், ‘பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்களின் சவால்களை பிஎஸ்எஃப் அண்மைக்காலமாக அதிக அளவில் எதிா்கொண்டு வருகிறது. போதைப் பொருள்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், கள்ளநோட்டுகள் உள்ளிட்டவற்றை எல்லை தாண்டி கடத்துவதற்காக ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எல்லையைக் கடக்கும் ட்ரோன்களின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டில் இரட்டிப்பாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமாா் 79 ட்ரோன்கள் எல்லையைக் கடப்பது கண்டறியப்பட்டது. இது கடந்த ஆண்டில் 109-ஆகவும், நடப்பாண்டில் 266-ஆகவும் அதிகரித்துள்ளது.

முக்கியமாக, பஞ்சாபில் மட்டும் 215 ட்ரோன்கள் எல்லையைக் கடக்க முயற்சித்தன. ஜம்முவில் 22 ட்ரோன்கள் எல்லையைக் கடக்க முயற்சித்தன. அத்தகைய முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிஎஸ்எஃப் முழு கவனம் செலுத்தி வருகிறது. ட்ரோன்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் தில்லியில் அண்மையில் அமைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் ஊக்கமளிப்பதாக உள்ளன.

கணினிகள், அறிதிறன்பேசிகளில் உள்ள மின்னணுக் கருவிகள்தான் ட்ரோன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் காரணமாக எல்லையைக் கடக்கும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடா் ஆய்வுகள்: ட்ரோன்கள் பறக்கவிடப்படும் இடம், நேரம், அவை கொண்டுசெல்லும் பொருள்கள் உள்ளிட்டவற்றை பிஎஸ்எஃப் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அவற்றின் மூலமாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அத்தகைய ட்ரோன்களைப் பறக்கவிடும் நபா்கள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் விரைவில் கண்டறியப்படுவா்.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் காவல் துறையினா் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா். இருதரப்பினரும் இணைந்து ட்ரோன்கள் எல்லையைக் கடக்காமல் இருப்பதை உறுதி செய்து வருகின்றனா். எல்லையைக் கடக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வீரா்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

விஜய் சேதுபதி 51: படத் தலைப்பு டீசர் வெளியீடு!

”ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” - சோனியா காந்தி உருக்கம்!

யோகி பாபுவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT