இந்தியா

தில்லி கொலைக் குற்றவாளி அஃப்தாப் எப்படிப்பட்டவர்? காவலர்கள் சொல்லும் மிக முக்கிய தகவல்

DIN

மும்பை: தில்லியில் பெண்ணைக் கொன்று 35 துண்டுகளாக்கிய குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

கால் சென்டர் ஊழியராக இருந்த ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த அஃப்தாப் பூனாவாலா, அவரை கொலை செய்து 35 துண்டுகளாக்கி, தில்லி முழுவதும் உடல் பாகங்களை வீசியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

ஷ்ரத்தாவைக் கொலை செய்தற்கான ஆதாரம், ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரம் என சில நாள்களாக, தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி வரும் காவல்துறையினர், அஃப்தாப்பிடம் விசாரணை நடத்தியவரை, அவர் மிகச் சாமர்த்தியமான குற்றவாளி போல நடந்து கொள்வதாகவும், துளியும் அவரது மனதில் கொலைக் குற்றம் செய்ததற்கான வருத்தமோ சிக்கிக் கொண்டதால் கவலையோ இல்லை என்றும் கூறுகிறார்கள்.

மற்ற அனைவரையும் போல, மிக இயல்பாக அதுவும் மிக மிக இயல்பாக இருக்கிறார் என்று கூறும் காவல்துறையினர், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால்தான், அவரது உண்மையான மனநிலையை அறிய முடியும் என்று கூறுகிறார்கள்.

ஒரு குற்றவாளி அவனுக்கேத் தெரியாமல் ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று காவல்துறையினர் இத்தனை காலமும் நம்பித்தான் பல விசாரணைகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

ஆனால், அஃப்தாப், ஷ்ரத்தாவின் வீட்டை சோதனை செய்யச் சென்ற போது இருந்த நம்பிக்கை நிச்சயம் சோதனை முடியும் போது இருந்திருக்கவே இருந்திருக்காது. காரணம், அந்த அளவுக்கு வீடு சுத்தப்படுத்தப்பட்டு, ஷ்ரத்தாவின் ஒரு தடயமும் அங்கு இருந்திருக்கவில்லை. இவ்வளவு சாமர்த்தியமான குற்றவாளிக்கு ஒரு ஆறு மாத காலம் என்பது மிகப்பெரிய காலம். அதனை அவன் மிகச் சிறப்பாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்றும் காவல்துறை கூறுகிறது.

மேலும், இந்த வழக்கில் தடயங்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் காவல்துறையினர் கருதுகிறார்கள்.

நாங்களும் எத்தனையோ கொலை நடந்த இடங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கொலையாளியால் சிந்திக்கவே முடியாத பல தடயங்கள் அங்கே எங்கள் கண்களில் நேராகப் பட்டுவிடும். ஆனால், இப்படி ஒரு சுத்தமான கொலை நடந்த இடத்தை இதுவரைப் பார்த்ததில்லை. பல ரசயானங்களைப் பயன்படுத்தி வீட்டை சுத்தப்படுத்தியிருக்கிறான். எந்த ரத்தக் கறையும் விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறான்.

இப்போதைக்கு கழிவுநீர் கால்வாய்களில் கிடைத்த மனித எலும்புகள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்திருக்கும் தடயங்கள். அதுவும் ஷ்ரத்தாவின் டிஎன்ஏவுடன் பொருந்தினால் மட்டுமே என்று மிகச் சவாலான வழக்கை விசாரித்து வரும் காவலர்கள் கூறுகிறார்கள்.

வீட்டில், ஷ்ரத்தாவைக் கொலை செய்த படுக்கை அறை, கழிப்பறையில் வைத்து ஷ்ரத்தாவின் உடலை அறுத்ததது, சில உடல் பாகங்களை மட்டும் கழிப்பறை வழியாக வெளியேற்றது என பல இடங்களையும் அஃப்தாப் காண்பித்துள்ளார். ஆனால் இதில் எப்போதுமே அவர் உணர்ச்சிவயப்படவில்லை. மிகவும் அமைதியாகவே இருந்தார் என்கிறார்கள் உடன் இருந்த காவலர்கள்.

எப்படி சிக்கினார் குற்றவாளி?

ஷ்ரத்தாவை காணவில்லை என்ற புகாரின் கீழ் விசாரணை நடத்திய தில்லி காவல்துறையினர், அவரைப் பற்றிய விசாரணைகள் அனைத்தும் எங்குத் தொடங்கினாலும் அஃப்தாப்பிடம் வந்து முடிவதைத் தொடர்ந்து, அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

வாசை காவல்நிலைய காவலர் ஒருவர் அஃப்தாப்பை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அஃப்தாப் ஒரு நாள் அதிகமாகக் குடித்துவிட்டு, தான் சாமர்த்தியமாக ஒரு கொலையை செய்துவிட்டு தப்பிவிட்டதாக பெருமைப்பேசும்போதுதான் காவல்துறையினர் வைத்த பொறியில் சிக்கியுள்ளார்.

ஷ்ரத்தாவைக் காணவில்லை என்று தேடி வந்த காவல்துறையினர், ஆரம்பத்தில் அஃப்தாப்பிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர் முகத்தில் எந்த பயமோ அல்லது வருத்தமோ இல்லாமல் காவல்நிலையத்துக்கு வந்து மிக சாதாரணமாக கேள்விகளை எதிர்கொண்டுள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் வராமல், அவரை காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் மாணிக்பூர் காவல்நிலையத்தில் இருந்து, அஃப்தாப் இதற்கு முன்பு மூன்று முறை அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இரண்டு முறையும், நவம்பர் மாதம் 3ஆம் தேதியும் அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது, மிகவும் சலனமற்று, எந்த வருத்தமோ பயமோ அவரது முகத்தில் இல்லை என்றும், காவல்துறையினர் கேட்டதற்கு, தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷ்ரத்தா கிளம்பி போய்விட்டதாகவும், நாங்கள் இப்போது ஒன்றாக வசிக்கவில்லை என்றும் அசால்ட்டாக பதிலளித்துள்ளார்.

முதலில் அக்டோபர் மாதம் அவர் காவல்நிலையத்துக்கு வந்தார். ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டு, பிறகு அவர் அனுப்பப்பட்டார். இறுதியாக நவம்பர் 3ஆம் தேதி மீண்டும் வரவழைக்கப்பட்டார். அப்போது அவரிடம் இரண்டு பக்க வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர் காவலர்கள். ஆனால், இரண்டு வேளைகளிலும் அவர் மிக சாதாரணமாக, பயமோ வருத்தமோ முகத்தில் காட்டாமல் இருந்துள்ளதாக காவலர்கள் கூறியிருந்தார்.

அவரிடம் ஷ்ரத்தா பற்றி கேட்டதற்கு, நாங்கள் பிரிந்துவிட்டோம், அவர் பிரிந்து சென்றுவிட்டார், இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று ஒரே மாதிரியான பதிலையே மீண்டும் மீண்டும் கூறியதால், ஆரம்பத்தில் அவர் மீது காவலர்களுக்கு சந்தேகம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், அப்போதும் அவர் மீது சந்தேகம் எழவில்லை என்றும் ஆனால், விசாரணையின் ஒரு பகுதியாக அவரை ஒரு தொடர்ந்து கண்காணிக்க ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஷ்ரத்தாவின் நண்பர்களோ, இந்த வழக்கில் கொலை நடந்ததற்கான பின்னணியை நிச்சயம் ஆராய வேண்டும் என்றும், உண்மையில் காதலிக்கும் ஒருவர் இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட மாட்டார் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT