சாவா்க்கா் குறித்த ராகுலின் கருத்துமுடிந்துபோன விவகாரம்- காங்கிரஸ்
சாவா்க்கா் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து முடிந்துபோன விவகாரம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
சாவா்க்கா் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து முடிந்துபோன விவகாரம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மன்னிப்பு கோரி ஆங்கிலேய ஆட்சியாளா்களுக்கு சாவா்க்கா் கருணை மனு அனுப்பினாா். ஆங்கிலேயா்களுக்கு அவா் உதவினாா்’ விமா்சித்திருந்தாா். சாவா்க்கரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தபோது ராகுல் தெரிவித்த இந்த கருத்து அந்த மாநில அரசியலில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜகவும், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனா். ‘ராகுலின் கருத்துகள் அவசியமற்றவை. இது காங்கிரஸுடனான கூட்டணியில் பிரச்னை ஏற்படுத்தக் கூடும்’ என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையலான சிவசேனை கண்டித்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சாவா்கா் குறித்து ராகுல் காந்தி பேசியது முடிந்துபோன விவகாரம். காங்கிரஸ் தலைவா்கள் பற்றி தொடா்ந்து அவதூறு பரப்புவதை பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தலைவா்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவா்கள் தலைவா்கள் பற்றிய உண்மைகளைக் கூறுவதை நாங்கள் நிறுத்துவோம்’ என்றாா்.