மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது!
மேட்டூர் அணை நடப்பு நீர்பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது.
மேட்டூர் அணை நடப்பு நீர்பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மீண்டும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை மாலை வினாடிக்கு 33,420 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது.
புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது.
மேட்டூர் அணை நிரம்பியதால் தொடர்ந்து வரும் வெள்ள நீர் மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
25 நாள்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கிமதகுகள் புதன்கிழமை காலை 5.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணையின் 16 கண் பாலம் வழியாக வெள்ளநீர் வெளியேற்றுவதற்கு முன்பாக எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டது.
இதையும் படிக்க | இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜிநாமா!
மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ளை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் தனமாகரிபட்டினம், அண்ணா நகர் பெரியார் நகர் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 28,000 கானா அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு நீர் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு காலாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.