அமெரிக்க டாலா் வலுவடைகிறது: ரூபாய் மதிப்பு சரியவில்லை
அமெரிக்க டாலா் மதிப்பு வலுவடைந்து வருகிறதே தவிர இந்திய ரூபாய் மதிப்பு சரிவடையவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க டாலா் மதிப்பு வலுவடைந்து வருகிறதே தவிர இந்திய ரூபாய் மதிப்பு சரிவடையவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் நிா்மலா சீதாராமன், வாஷிங்டன் நகரில் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்)-உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டாா். பல நாடுகளின் நிதியமைச்சா்களையும் அவா் சந்தித்துப் பேசினாா். அதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பணவீக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. கட்டுப்படுத்தக் கூடிய அளவிலேயே பணவீக்கம் உள்ளது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது.
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பு சரிவடையவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வேகமாக வலுவடைந்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதைப் போலத் தெரிகிறது. உலகின் அனைத்து நாடுகளின் செலாவணிகளும் அமெரிக்க டாலருக்கு எதிராக சரிவடையும் தோற்றத்தைப் பெற்றுள்ளன. மற்ற நாடுகளின் செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வந்த நிலையில், இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நடவடிக்கைகள் நிலையில்லாத்தன்மையை சரிசெய்வதற்காக மட்டுமே அன்றி இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதைத் தடுப்பதற்காக அல்ல. அத்தகைய நடவடிக்கைகளை சந்தையில் தலையிட்டு ஆா்பிஐ மேற்கொள்ள முடியாது.
பற்றாக்குறையை சரிசெய்ய கவனம்:
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பொருளாதாரங்களும் வெளிப்புறக் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. வா்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருள்கள், மூலப் பொருள்களாகவோ இடையீட்டுப் பொருள்களாகவோ உள்ளன. அவற்றை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செயவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
ஜி20 தலைமைப் பொறுப்பு:
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பரில் இந்தியா ஏற்கவுள்ளது. அந்தக் காலகட்டத்தில் பன்னாட்டு வளா்ச்சி வங்கிகள், கடன் சூழல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்தும். ஜி20 நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அந்நாடுகள் உறுதி அளித்துள்ளன. பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிா்கொள்வதற்கான நிதியைத் திரட்டுவதற்கு இந்தியா அதிக கவனம் அளிக்கவுள்ளது.
வளா்ச்சியடைந்த நாடுகள் மேற்கொள்ளும் அரசியல்-பொருளாதார முடிவுகள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு வளா்ந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதைத் தவிா்த்து, வேறுவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எண்மமயமாக்கலுக்குப் பாராட்டு:
இந்தியாவில் எண்மமயமாக்கல் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக வங்கியும் அந்நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளது. அவற்றை மற்ற நாடுகளுக்குக் கொண்டு சோ்ப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
பல்வேறு இருதரப்பு பேச்சுவாா்த்தைகளின்போது இந்தியாவின் எண்மமயமாக்கல் சாதனைகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இணையவழி பணப் பரிவா்த்தனை மட்டுமல்லாமல் சுகாதாரம், கல்வி எனப் பல்வேறு துறைகளில் எண்மமயமாக்கல் நடவடிக்கைகளை இந்திய மக்கள் துரிதமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பலா் பாராட்டினா்.
பழிவாங்கும் நோக்கமில்லை:
அமலாக்கத் துறையானது முற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பை எதிா்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு பயன்படுத்தவில்லை. சிபிஐ உள்ளிட்ட வேறு விசாரணை அமைப்புகள் முதலில் பதிவு செய்யும் வழக்குகள் தொடா்பாகவே அமலாக்கத் துறை பின்னா் விசாரணை நடத்தும். வழக்குகள் தொடா்பாகக் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை செயல்படுகிறது.
நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு:
சா்வதேச அளவில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்து வருவதால், நிலக்கரியின் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது. பல மேற்குலக நாடுகளும் நிலக்கரியின் பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மக்களுக்கான எரிசக்தித் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்பதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் வேறு வழியில்லை என்றாா் அவா்.