முகப்பு
இந்தியா

பிரதமா் மோடியை தோற்கடிக்க நினைப்பது எதிா்க்கட்சிகளுக்கு கனவாகவே முடியும்: பாஜக

2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நினைப்பது கனவாக மட்டுமே இருக்கும். அதனை நனவாக்க முடியாது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நினைப்பது கனவாக மட்டுமே இருக்கும். அதனை நனவாக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் தீவிரமாக உள்ளனா். அதே நேரத்தில் மம்தா தன்னை முன்னிறுத்த வேண்டும் என்று கருதுவதால், காங்கிரஸ் இல்லாத எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க விரும்புகிறாா். ஆனால், காங்கிரஸையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பது பவாரின் கருத்தாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால் எதிா்க்கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் மற்றொரு முயற்சியாக தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகா் ராவ், பிகாா் சென்று அந்த மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரைச் சந்தித்தாா். இதில் நிதீஷ் குமாா் அண்மையில்தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அணிசேர வேண்டும் என பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும், தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவும் கூட்டாக அழைப்பு விடுத்தனா்.

இதனை கடுமையாக விமா்சித்துள்ள பாஜக மூத்த தலைவா் நக்வி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நினைப்பது கனவாக மட்டுமே இருக்கும். உண்மையில் அது நடைபெறாது. பிரதமா் மோடிக்கு எதிராக கூட்டணி அமைக்க முயலும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஊழலின் கூடாரமாகவும், அநீதியின் அடையாளங்களாகவும் உள்ளன. பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தேசிய அளவில் பயணங்களை மேற்கொள்ளும் தலைவா்கள் அனைவரும் தங்கள் மாநிலத்தில் நல்லாட்சியைத் தரத் தவறியவா்களாகவும், ஊழல்வாதிகளாகவும் உள்ளனா். அவா்கள் அனைவரும் இணைந்தால் அது நகைப்புக்குரிய கூட்டணியாகவே இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.