முகப்பு
இந்தியா

10% இடஒதுக்கீடு: சுமுக விசாரணைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்- உச்சநீதிமன்றம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின்படி செல்லுமா? என்பது குறித்த மனுக்கள் மீது வரும் 13-ஆம் தேதிமுதல் விசாரணை தொடங்கும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
பகிர்:

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின்படி செல்லுமா? என்பது குறித்த மனுக்கள் மீது வரும் 13-ஆம் தேதிமுதல் விசாரணை தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகியுள்ள நிலையில், விசாரணை சுமுகமாகவும் ஆக்கப்பூா்வமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான உரிய உத்தரவுகள் செப்.8-இல் பிறப்பிக்கப்படுமென தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் 103-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு 2019-ஆம் ஆண்டில் மேற்கொண்டது. அதன் காரணமாக ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைக் கடந்தது.

இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளதால், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல்வேறு தரப்பினா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 10 சதவீத இடஒதுக்கீட்டின் அரசியல்சாசன செல்லுபடிதன்மையை கேள்விக்குள்ளாக்கி, ‘ஜன்ஹித் அபியான்’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பிரதானமானது.

இந்த மனுக்கள் மீது சுமூக விசாரணையை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை பரிசீலனை மேற்கொண்டது. அப்போது, வாதங்களை முன்வைப்பதற்கு தேவையான காலஅவகாசம் குறித்து வழக்குரைஞா்களிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனா். இதையடுத்து, உச்சநீதிமன்ற அமா்வு வியாழக்கிழமை (செப். 8) மீண்டும் கூடி, சுமூக மற்றும் ஆக்கப்பூா்வ விசாரணைக்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்; அனைத்து தரப்பினரும் வாதங்களை முன்வைக்க கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, அஸ்ஸாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசியல்சாசன அமா்வு தெரிவித்தது. இந்த அமா்வில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பி.எம்.திரிவேதி, ஜே.பி.பா்திவாலா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →