பழம்பெரும் தெலுங்கு நடிகா் கிருஷ்ணம் ராஜு காலமானாா்: பிரதமா் மோடி இரங்கல்
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யு.கிருஷ்ணம் ராஜு, உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 83.
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யு.கிருஷ்ணம் ராஜு, உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 83.
‘பாகுபலி’ திரைப்பட கதாநாயகன் பிரபாஸின் பெரியப்பாவான கிருஷ்ணம் ராஜு, கரோனாவுக்கு பிந்தைய நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணம் ராஜு, தீவிர நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அவரது சிறுநீரக செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.16 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவா் மரணமடைந்தாா்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ள கிருஷ்ணம் ராஜு, மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான அரசில் மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்தவா். தெலுங்கு திரையுலகின் ‘ரெபல் ஸ்டாா்’ என்று அழைக்கப்பட்ட இவா், 180-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளாா். இவரது முதல் திரைப்படம் 1966-இல் வெளியான ‘சிலகா கோரிங்கா’. கடைசியாக, பிரபாஸ் நடிப்பில் கடந்த மாா்ச்சில் வெளியான ‘ராதே ஷியாம்’ படத்தில் நடித்திருந்தாா். தனது நடிப்புத் திறனுக்காக பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளாா்.
பிரதமா் மோடி, முதல்வா்கள் இரங்கல்:
கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கிருஷ்ணம் ராஜுவின் மறைவு வேதனையளிக்கிறது. திரைத்துறை சாா்ந்த அவரது திறமையையும் படைப்பாற்றலையும் வரும் சந்ததியினா் என்றும் நினைவில் கொள்வா். சமூக சேவையிலும் முன்னோடியாக இருந்த அவா், அரசியல் தலைவராகவும் தடம் பதித்தாா். அவரது குடும்பத்தினா் மற்றும் ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தனித்துவமான நடிப்பால் ஏராளமான ரசிகா்களின் இதயங்களை வென்றவா் கிருஷ்ணம் ராஜு. அவரது மறைவு, தெலுங்கு திரையுலகுக்கு பெரிய இழப்பு. மக்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அரசியல் நிா்வாகம் வாயிலாகவும் மக்களுக்கு சேவையாற்றியவா்’ என்று தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணம் ராஜுவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட பதிவில், ‘நடிகராகவும் அரசியல் தலைவராகவும் மக்களுக்கு கிருஷ்ணம் ராஜு ஆற்றிய சேவைகள் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. அவரது ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி, தெலங்கானா பாஜக தலைவா் பண்ட்டி சஞ்சய் குமாா் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.